இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 3ம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி வீரர்கள் 7 பேர் டக் அவுட்டாகினர். இலங்கை அணியின் மோசமான பேட்டிங்கால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நடந்த முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 175 ரன்களையும், ரிஷப் பண்ட் 96 ரன்களையும், அஷ்வின் 61 ரன்களையும் குவித்தனர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 174 ரன்களுக்கு சுருண்டது. ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, 2வது இன்னிங்ஸிலும் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழலில் இலங்கை அணி மண்டியிட்டு சரணடைந்தது. முதல் இன்னிங்ஸில் ஜடேஜா 5 விக்கெட்டுகளும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளும் என மொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஷ்வின் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளும் என மொத்தம் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இலங்கை அணியில் முதல் இன்னிங்ஸில் 4 வீரர்கள் மற்றும் 2வது இன்னிங்ஸில் 3 வீரர்கள் என 3ம் நாள் ஆட்டத்தில் மட்டும் மொத்தமாக 7 பேர் டக் அவுட்டாகி வெளியேறினர். அந்தளவிற்கு பேட்டிங் ஆடுவதற்கு கடினமான ஆடுகளமாக அது இல்லை. பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்தது. ஆனாலும் இலங்கை வீரர்கள் படுமோசமாக பேட்டிங் ஆடினர். முதல் இன்னிங்ஸில் பதும் நிசாங்காவும், 2வது இன்னிங்ஸில் டிக்வெல்லாவும் மட்டுமே அரைசதம் அடித்தனர்.

முதல் இன்னிங்ஸில் லக்மல், எம்பல்டேனியா, விஷ்வா ஃபெர்னாண்டோ மற்றும் லஹிரு குமாரா ஆகிய நால்வரும் டக் அவுட்டானார்கள். அதில் 3 விக்கெட்டுகளை ஜடேஜா தான் வீழ்த்தினார். ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸை இலங்கை அணி தொடர்ந்த நிலையில், 2வது இன்னிங்ஸில் திரிமன்னே, லக்மல் மற்றும் விஷ்வா ஃபெர்னாண்டோ ஆகிய மூவரும் டக் அவுட்டானார்கள். ஒரே நாள் ஆட்டத்தில் 7 இலங்கை வீரர்கள் டக் அவுட்டானார்கள்.