நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிவருகிறது. 

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, கடந்த 14ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியில், ரோஸ் டெய்லரை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. டெய்லர் மட்டுமே 86 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 249 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, 267 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. 18 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி வீரர்கள், இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பினர். வாட்லிங் மட்டுமே பொறுப்புடன் ஆடி 77 ரன்களை குவித்து நியூசிலாந்து அணியை காப்பாற்றினார். அவரும் 77 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் சோமர்வில்லி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் அடித்தார். நான்காம் நாள் உணவு இடைவேளைக்கு முன், நியூசிலாந்து அணி 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

உணவு இடைவேளைக்கு பின், 268 ரன்கள் என்ற இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் கருணரத்னே மற்றும் திரிமன்னே ஆகிய இருவரும் களமிறங்கினர். இலக்கை எட்டி வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற உறுதியுடன் இருவரும் இறங்கியுள்ளனர் என்பது அவர்களின் ஆட்டத்தின் வாயிலாகவே தெரிகிறது. இருவரும் நிதானமாக தொடங்கி, பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடிவருகின்றனர். 

பொறுப்புடன் ஆடிவரும் கேப்டன் கருணரத்னே அரைசதம் அடித்துவிட்டார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து திரிமன்னேவும் சிறப்பாக ஆடிவருகிறார். டிரெண்ட் போல்ட், சௌதி, அஜாஸ் படேல் ஆகியோர் மாறி மாறி வீசியும் அவர்களால் முதல் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி 80 ரன்களை கடந்து ஆடிவருகிறது. இலங்கை அணியின் தொடக்க ஜோடியே அந்த அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது.