உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் நேற்று நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதிய போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 

கார்டிஃபில் நடந்த இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முழுக்க முழுக்க இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தி ஆடியது. தொடக்கம் முதல் இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஒருமுனையில் தொடக்க வீரரும் கேப்டனுமான கருணரத்னே களத்தில் இருக்க, மறுமுனையில் அனைத்து இலங்கை வீரர்களும் விக்கெட்டை இழந்தனர். 

குசால் பெரேரா, இரண்டாவது விக்கெட்டுக்கு கருணரத்னேவுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். ஆனால் அவரும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. 29 ரன்களில் வெளியேறினார். அதன்பின்னர் குசால் மெண்டிஸ், தனஞ்செயா டி சில்வா, மேத்யூஸ், ஜீவன் மெண்டிஸ், திசாரா பெரேரா, உடானா, லக்மல், மலிங்கா என அனைவரும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் கருணரத்னே மட்டும் அரைசதம் அடித்து மறுமுனையில் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தார். 

வெறும் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை அணி. 137 ரன்கள் என்ற இலக்கை நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்டிலும் முன்ரோவுமே அடித்துவிட்டனர். விக்கெட் இழப்பின்றி 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

முதல் போட்டியிலேயே படுதோல்வி அடைந்தது இலங்கை அணி. இதனால் கடும் அதிருப்தியடைந்த இலங்கை கேப்டன் கருணரத்னே, பேட்ஸ்மேன்களை விளாசினார். போட்டிக்கு பின்னர் பேசிய கருணரத்னே, 136 ரன்கள் என்பது கண்டிப்பாக போதாது. மிகவும் குறைவான ரன். நானும் குசால் பெரேராவும் நன்றாகா ஆடினோம். ஆனாலும் அதன்பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. பார்ட்னர்ஷிப் அமைக்க தவறிவிட்டோம். பந்து நல்ல வேகமாக வந்ததுடன் ஸ்விங்கும் ஆனது. பெரிய ஷாட்டுகளை ஆடுவதற்கு முன், எப்போது அடித்து ஆட வேண்டும், எப்போது நிதானமாக ஆட வேண்டும் என்பதை வீரர்கள் புரிந்துகொண்டு ஆட வேண்டும் என கருணரத்னே தெரிவித்தார்.