ஆஷஸ் தொடர் முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நடக்கும் அனைத்து டெஸ்ட் போட்டிகளும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள். 

அனைத்து அணிகளுமே 3 உள்நாட்டு மற்றும் 3 வெளிநாட்டு தொடர்களில் ஆடும். மொத்தமாக 27 டெஸ்ட் தொடர்கள் நடக்கவுள்ளன. இவற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையே 2021ம் ஆண்டு இங்கிலாந்தில் இறுதி போட்டி நடக்கும். 

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் தொடரும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானதுதான். இந்நிலையில், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

கடந்த 14ம் தேதி தொடங்கி நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியில், ரோஸ் டெய்லரை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. டெய்லர் மட்டுமே 86 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 249 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, 267 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. 18 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி வீரர்கள், இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பினர். வாட்லிங் மட்டுமே பொறுப்புடன் ஆடி 77 ரன்களை குவித்து நியூசிலாந்து அணியை காப்பாற்றினார். அவரும் 77 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் சோமர்வில்லி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் அடித்தார். நான்காம் நாள் உணவு இடைவேளைக்கு முன், நியூசிலாந்து அணி 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

268 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் கருணரத்னே மற்றும் திரிமன்னே ஆகிய இருவரும் அபாரமாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 161 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த திரிமன்னே, 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த குசால் மெண்டிஸ் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அபாரமாக ஆடி சதமடித்த இலங்கை கேப்டன் கருணரத்னே 122 ரன்களுக்கு அவுட்டானார்.

குசால் பெரேரா 23 ரன்களில் ஆட்டமிழக்க, மேத்யூஸும் தனஞ்செயா டி சில்வாவும் இணைந்து போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தனர். இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் கருணரத்னே மற்றும் திரிமன்னே அமைத்து கொடுத்த சிறப்பான தொடக்கத்தால் எளிதாக வெற்றி பெற்றது இலங்கை அணி. 

இது 2 போட்டிகள் கொண்ட தொடர் என்பதால், ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிப்படி, 60 புள்ளிகள். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் மொக்கையான பாயிண்ட் சிஸ்டம் எனவே 60 புள்ளிகளை பெற்று, இலங்கை அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.