ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷேன் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். ஸ்மித் 145 ரன்களையும், லபுஷேன் 104 ரன்களையும் குவிக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை குவித்தது.

இதையும் படிங்க - 11 வருஷத்துக்கு முன் சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் போட்ட டுவீட்..! இப்ப செம வைரல்

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணியில் கருணரத்னே (86), குசால் மெண்டிஸ்(85), மேத்யூஸ்(51), காமிந்து மெண்டிஸ்(61) ஆகிய நால்வரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். தினேஷ் சண்டிமால் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டை சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த தினேஷ் சண்டிமால் 206 ரன்களை குவித்தார். அவரது இரட்டை சதத்தால் முதல் இன்னிங்ஸில் 554 ரன்களை குவித்தது இலங்கை அணி.

190 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டரை சரித்தார் இலங்கை பவுலர் பிரபாத் ஜெயசூரியா. உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய 3 மிகப்பெரிய வீரர்களை வீழ்த்திய பிரபாத் ஜெயசூரியா, கேமரூன் க்ரீன், மிட்செல் ஸ்டார்க், ஸ்வெப்சன் ஆகியோரையும் வீழ்த்தினார். தீக்‌ஷனாவும் அவருடன் இணைந்து விக்கெட் வேட்டையில் ஈடுபட, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் வெறும் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையும் படிங்க - கோலியை தூக்கி எறியணுமா..? நண்பன் கோலிக்காக கபில் தேவுக்கு பதிலடி கொடுத்த ரோஹித்

இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது இலங்கை அணி.