ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 292 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இலங்கை அணி. 

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதையடுத்து தொடர் 1-1 என சமனடைந்திருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், 3வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 291 ரன்களை குவித்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் வெறும் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் ஃபின்ச் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். மிட்செல் மார்ஷ் 10 ரன்னில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த ஃபின்ச் 62 ரன்னில் ஆட்டமிழந்தார். லபுஷேன் 29 ரன்கள் மட்டுமே அடித்தார்.

121 ரன்களுக்கு ஆஸி.,அணி 4 விக்கெட்டுகளை இழக்க, 5வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரியும் டிராவிஸ் ஹெட்டும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடினர். 49 ரன்னில் ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார் அலெக்ஸ் கேரி. பொறுப்புடனும் அதேவேளையில் அதிரடியாகவும் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். டிராவிஸ் ஹெட். ஹெட் 65 பந்தில் 70 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். மேக்ஸ்வெல் 18 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 33 ரன்களை விளாச, 50 ஓவரில் 291 ரன்களை குவித்தது ஆஸி.,அணி.

292 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணியின் தொடக்க வீரர் டிக்வெல்லா 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிசாங்காவும் குசால் மெண்டிஸும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி 213 ரன்களை குவித்தனர். அபாரமாக ஆடி சதத்தை நெருங்கிய குசால் மெண்டிஸ் 87 ரன்களுக்கு ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்.

ஆனால் பொறுப்புடன் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய நிசாங்கா சதமடித்தார். 137 ரன்களை குவித்த நிசாங்கா, இலங்கையின் வெற்றிக்கு வெறும் 8 ரன் தேவைப்பட்ட நிலையில் ஆட்டமிழந்தார். நிசாங்கா இலங்கை அணியை கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றதால் அந்த இலக்கை அடித்து 6விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி 2-1 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.