நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெறும் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை அணி. 

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி கார்டிஃபில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் இலங்கை அணியை பேட்டிங் செய்ய பணித்தார். 

தொடக்க வீரர்களாக திரிமன்னே மற்றும் கேப்டன் கருணரத்னே ஆகிய இருவரும் களமிறங்கினர்.  முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த திரிமன்னே, இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த குசால் பெரேரா, வந்தது முதலே அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். ஆனால் நன்றாக ஆடிக்கொண்டிருந்த அவர், அவசரப்பட்டு தூக்கி அடித்து 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் அவுட்டானதற்கு அடுத்த பந்திலேயே குசால் மெண்டிஸையும் வீழ்த்தினார் ஹென்ரி. 

இதையடுத்து தனஞ்செயா டி சில்வா 4 ரன்களிலும் அனுபவ வீரரும் முன்னாள் கேப்டனுமான மேத்யூஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஜீவன் மெண்டிஸ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 60 ரன்களுக்கே இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடக்க வீரரும் கேப்டனுமான கருணரத்னே நங்கூரம் போட்டு களத்தில் நின்றார். ஆனாலும் பெரேரா, உடானா, லக்மல், மலிங்கா என அனைவரும் ஆட்டமிழந்தனர். அரைசதம் கடந்த கேப்டன் கருணரத்னே மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். 30வது ஓவரில் வெறும் 136 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டானது. 

எனவே இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெல்வது உறுதியாகிவிட்டது.