இந்திய கிரிக்கெட் அணியின் சர்ச்சைக்குரிய வீரர்களில் முதன்மையானவர் ஸ்ரீசாந்த். அவர் இந்திய அணிக்காக ஆடிய காலத்தில், அவரைச்சுற்றி சர்ச்சைகள் இருந்துகொண்டே இருந்தன. ஐபிஎல்லில் சூதாட்டப்புகாரில் சிக்கி தடையில் இருந்த ஸ்ரீசாந்த், அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். அவரது தடை முடியவுள்ளது. எனவே அவர் மீண்டும் கிரிக்கெட் ஆடும் ஆர்வத்தில் உள்ளார். 

இதற்கிடையே, ஊரடங்கு காலத்தில் நிறைய இண்டர்வியூக்கள் கொடுத்துவருகிறார். இந்நிலையில், தற்போதைய ஒரு இண்டர்வியூவில், தனக்கு கேட்ச் பிடிக்க தெரியாது என்று தன்னை அசிங்கப்படுத்தும் விதமாக பேசிய ராபின் உத்தப்பாவுக்கு ஸ்ரீசாந்த் பதிலடி கொடுத்துள்ளார். 

2007ல் முதல் முறையாக நடந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. அந்த உலக கோப்பையில் ஸ்ரீசாந்த் முக்கிய பங்காற்றினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி கட்டாயத்தில் இந்திய அணி ஆடிய போட்டி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் சிறப்பாக ஆடினார். 

அதிலும், இறுதி போட்டியின் பரபரப்பான கடைசி ஓவரில் மிஸ்பா உல் ஹக்கின் கேட்ச்சை பிடித்து இந்திய அணியை த்ரில் வெற்றி பெற செய்தார். வரலாற்றில் இடம்பிடித்த அந்த தருணத்தில் ஸ்ரீசாந்துக்குத்தான் முக்கிய பங்கு. 2007 டி20 உலக கோப்பை என்றதுமே, ஸ்ரீசாந்த் பிடித்த அந்த கடைசி கேட்ச் தான் நினைவுக்கு வரும். 

இந்நிலையில், தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், உத்தப்பா அந்த கேட்ச் குறித்து பேசினார். ”வழக்கமாக எளிய கேட்ச்களைக்கூட  கோட்டைவிடும் ஸ்ரீசாந்த், அந்த கேட்ச்சை பிடித்துவிட்டார்” என்று தெரிவித்திருந்தார். அணியில் அதிகமாக கேட்ச்சை தவறவிடும் வீரர் ஸ்ரீசாந்த் என்றும் உத்தப்பா தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், உத்தப்பாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஸ்ரீசாந்த். உத்தப்பாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்து பேசியுள்ள ஸ்ரீசாந்த், உத்தப்பா அவரது கிரிக்கெட் கெரியரில் மொத்தம் எத்தனை கேட்ச்களை பிடித்திருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. கடந்த ரஞ்சி சீசனில் கேரளா அணியில் ஆடினார். அப்போது, எளிமையான பல கேட்ச்களை அவர் தவறவிட்டதாக எனக்கு தகவல் வந்தது. 

நான் கூடிய விரைவில் கேரளா அணிக்காக ஆடுவேன். உத்தப்பாவுக்கு நான் சொல்ல நினைப்பதெல்லாம் ஒரே ஒரு விஷயம் தான்... கடந்த சீசனில் கேட்ச்களை விட்டதைப்போல எனது பவுலிங்கில் விட்டுவிடாதீர்கள். ஏனெனில், இளம் பவுலர்களின் பவுலிங்கில் கேட்ச்சை தவறவிட்டிரூப்பீர்கள். அவர்கள் உங்களை எதுவும் சொல்லியிருக்க மாட்டார்கள். ஆனால் நான் அப்படியல்ல; என் பவுலிங்கில் கேட்ச் விட்டால் நான் என்ன செய்வேன் என்று உங்களுக்கே தெரியும். 

சர்வதேச கிரிக்கெட்டில் நான் ஆடிய 8 ஆண்டுகளில் மொத்தமாகவே 4-5 கேட்ச்களையும், எனது ஒட்டுமொத்த கிரிக்கெட் கெரியரில் 10-15 கேட்ச்களையும் மட்டுமே தவறவிட்டிருக்கிறேன். பயிற்சியின் போது வேண்டுமானால் கேட்ச்சை தவறவிட்டிருக்கலாம். அதில் ஒன்றும் தவறில்லை. ஏனெனில் ஜாண்டி ரோட்ஸே கூட பயிற்சியில் கேட்ச்களை தவறவிடுவார் என்று ஸ்ரீசாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.