உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு தென்னாப்பிரிக்க வீரர்கள் உணர்ச்சி பொங்க பேசினார்கள். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
South African Players Spoke Passionately About Winning World Test Championship Title: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு முதல் ஐசிசி கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்ற தென்னாப்பிரிக்கா
பின்பு தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியும் வெறும் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 74 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற 282 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சவாலான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க வீரர்கள் உற்சாகம்
தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் சிறப்பாக விளையாடி சதம் (136 ரன்கள்) விளாசி ஆட்டநாயகனாக ஜொலித்தார். ரபாடா இரண்டு இன்னிங்சிலும் 9 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். 27 ஆண்டுகளுக்கு பிறகு முதல் ஐசிசி கோப்பையை வென்றதால் தென்னாப்பிரிக்க வீரர்கள் மிகுந்த உணர்ச்சிவசத்துடன் காணப்பட்டனர்.
தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா சொன்னது என்ன?
இந்த போட்டிக்கு பிறகு பேசிய தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா, ''இது எங்களுக்கும், எங்கள் நாட்டு மக்களுக்கும் பெருமைமிக்க தருணம். இது ஒரு சிறப்பு நாட்கள். சில சமயங்களில் நாங்கள் தென்னாப்பிரிக்காவில் இருப்பது போல் உணர்ந்தோம். எங்களுக்கு நல்ல ஆதரவு இருந்தது. இந்த போட்டிக்காக கடுமையாக தயாரானோம். மிகுந்த நம்பிக்கையுடன் வந்தோம். ஒரு அணியாக இணைந்து செயல்பட்டு வெற்றிக் கனியை பறித்துள்ளோம்.
கசிசோ ரபாடாவுக்கு பாராட்டு
கசிசோ ரபாடா ஒரு மகத்தான வீரர். சில சர்ச்சையின் கீழ் வந்த அவர் அணிக்கு தேவையானதை செய்துள்ளார். எய்டன் மார்க்ரம் நம்பமுடியாதவர். அவரது இடத்தை சிலர் கேள்விக்குறியாக்கினார்கள். ஆனால் எய்டன் தன்னுடைய பாணியில் விளையாடி பதில் அளித்துள்ளார். அவரும், ரபாடாவும் இணைந்து வெற்றியை சாத்தியமாக்கியுள்ளனர். நாங்கள் எடுத்த பாதையில் சந்தேகங்கள் இருந்தன, இந்த வெற்றி அதை நசுக்கியுள்ளது. பிளவுபட்டிருந்தாலும், ஒரு தேசமாக நாம் ஒன்றுபடுவதற்கான ஒரு வாய்ப்பு இதோ. நாம் ஒன்றாக வெற்றியை கொண்டாடுவோம்'' என்று தெரிவித்தார்.
சொந்த மண்ணில் விளையாடுவது போல் உணர்ந்த மார்க்ரம்
சதம் விளாசி ஆட்டநாயகன் விருது வென்ற எய்டன் மார்க்ரம் கூறுகையில், ''நான் முக்கியமான ரன்கள் எடுத்ததில்லை. முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன பிறகு இப்போது சதம் அடித்தது விசித்திரமாக உள்ளது. ஒவ்வொரு டெஸ்ட் கிரிக்கெட் வீரரும் விளையாட விரும்பும் இடம் லார்ட்ஸ். இங்கே இறுதிப் போட்டியை விளையாடுவது நம்பமுடியாத அளவிற்கு சிறப்பு வாய்ந்தது. அதிலும் ஏராளமான தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் ஆதரவளித்தது சொந்த மண்ணில் விளையாடுவது போல் இருந்தது. சிறிது நேரம் களத்தில் பொறுமை காத்தால் ரன்கள் தானாக வரும்.
நிறைய பேர் நினைவில் வைத்திருக்கும் இன்னிங்ஸ்
நாதன் லயன் சிறந்த பவுலர்களில் ஒருவர். பந்துகள் தொடர்ந்து சுழன்று கொண்டிருந்தால் கண்டிப்பாக அவர் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார். டெம்பா பவுமாவுக்கு காயம் ஏற்பட்டபோது சிறிது நேரம் ஓய்வெடுக்க சொன்னேன். கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளாக அவர் எங்களை முன்னணியில் இருந்து வழிநடத்தியுள்ளார். நேற்று அவர் மைதானத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை, மிகவும் முக்கியமான ரன்கள் எடுக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தார், நிறைய பேர் நினைவில் வைத்திருக்கும் ஒரு இன்னிங்ஸை விளையாடினார்'' என்றார்.
கசிசோ ரபாடா
நான் எப்படி உணர்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மிகவும் மகிழ்ச்சி, நாங்கள் நன்றாக திட்டமிட்டு கடினமாக உழைத்துள்ளோம். நாங்கள் இங்கே இருப்பதற்கு தகுதியானவர்கள். நாங்கள் வலுவான எதிரணிகளை சந்திக்கவில்லை என்று நிறைய பேர் சொன்னார்கள். அது தவறு. இந்த முறை நாங்கள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளோம். ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. கடந்த நான்கு நாட்கள் சொந்த மைதானத்தில் விளையாடுவது போல் உணர்ந்தேன்.
ரியான் ரிக்கல்டன்
விக்கெட் கொஞ்சம் சிறப்பாக இருந்தது. வீரர்கள் அற்புதமாக பேட்டிங் செய்தனர். ஐடனின் (மார்க்ரம்) இன்னிங்ஸ் நான் பார்த்ததிலேயே சிறந்த இன்னிங்ஸில் ஒன்றாகும். அனுபவம் வாய்ந்த பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடினார். நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தோம். நாங்கள் சீக்கிரமே அழுத்தத்தை உள்வாங்கி பின்னர் அதை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்பினோம்.
கண்ணீர் மல்க பேசிய கேசவ் மகாராஜ்
கோப்பையை உயர்த்தி நாட்டுக்கு கொண்டு செல்வது பெருமைவாய்ந்த ஒன்றாகும். கடந்த ஐந்து நாட்களில் அனைவரிடையேயும் காணப்படும் ஒற்றுமையே நாட்டின் சிறப்பம்சம். ஒரு அணியாக, ஒரு தேசமாக, ஒரு பெருமைமிக்க நாடாக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நான் பேட்டிங் செய்யத் தொடங்கியிருந்தால், அந்த உணர்ச்சிகள் என்னை சரியான திசையில் கொண்டு சென்றிருக்கும் என்று நினைக்கிறேன். எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி, துன்பத்தின் போது நாங்கள் வலுவாக நின்றோம். இந்த கோப்பை வரவிருக்கும் பெரிய விஷயங்களுக்கு ஒரு படிக்கல்லாக இருக்கட்டும்.
மார்கோ ஜான்சன்
என்ன சொல்வது என்று தெரியவில்லை. டிரஸ்ஸிங் ரூமில் அனைவரும் அமைதியாக இருந்தனர். நான் அங்கே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன், அதிர்ஷ்டவசமாக நாங்கள் வேலையை முடித்துவிட்டோம். மார்க்ராம் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக விளையாடினார். அவரும் டெம்பாவும் எங்களை மகிழ்ச்சியின் எல்லைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
