உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. அந்த அணி வீரர் எய்டன் மார்க்ரம் சூப்பர் சதம் விளாசினார். 

WTC Final 2025: South Africa On The Verge of Victory: ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் எடுத்தார். பியூ வெப்ஸ்டர் 72 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் கசிசோ ரபாடா 5 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

பின்பு தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியும் வெறும் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை அள்ளினார். மிட்ச்செல் ஸ்டார்க் 2 விக்கெட் வீழ்த்தினார். இதனால் 74 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் உஸ்மான் கவாஜா(6), கேமரூன் கிரீன் (0), மார்னஸ் லபுஸ்சேன் (22), ஸ்டீவ் ஸ்மித் (13), டிராவிஸ் ஹெட் (9), வெப்ஸ்டர் (9) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 148/9 என பரிதவித்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு சவாலான இலக்கு

பின்பு ஜோடி சேர்ந்த மிட்ச்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில்வுட் கடைசி விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியாவை 200 ரன்கள் கடக்க வைத்தனர். ஆஸ்திரேலியா 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்டார்க் 58 ரன்கள் விளாசினார். தென்னாப்பிரிக்கா தரப்பில் ராபாடா 4 விக்கெட்டும், லுங்கி இங்கிடி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இதன்மூலம் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற 282 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

முதலில் தடுமாறிய பேட்ஸ்மேன்கள்

சாவாலான இலக்கை நோக்கி பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 9 ரன்னில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. ரியான் ரிக்கல்டன் 6 ரன்னில் ஸ்டார்க் பந்தில் கேரியிடம் கேட்ச் ஆனார். பின்பு களமிறங்கிய முல்டர் தன் பங்குக்கு 27 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பந்தில் கேட்ச் ஆனார். அப்போது தென்னாப்பிரிக்கா 70/2 என்ற நிலையில் இருந்தது. ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் சிறப்பாக விளையாடினர்.

மார்க்ரம் சூப்பர் சதம்

அவருக்கு கேப்டன் டெம்பா பவுமா நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். மார்க்கரம் அதிரடியாக பவுண்டரிகளாக விளாச, பவுமா நிதானம் காட்டினார். ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், லயன் என அனைத்து பவுலர்களும் பந்துவீசியும் இந்த ஜோடியை கடைசி வரை பிரிக்க முடியவில்லை. அட்டகாசமாக விளையாடிய மார்க்ரம் சூப்பர் சதம் விளாசினார். கேப்டன் பவுமாவும் அரை சதம் விளாசினார். தென்னாப்பிரிக்கா அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது.

நாளை போட்டியை முடிக்கும் தென்னாப்பிரிக்கா

மார்க்ரம் 159 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 102 ரன்களும், பவுமா 121 பந்தில் 5 பவுண்டரியுடன் 65 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். தென்னாப்பிரிக்கா வெற்றி பெற இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அந்த அணி கைப்பற்றப் போவது உறுதியாகி விட்டது. நாளை முதல் 20 ஓவர்களுக்குள் தென்னாப்பிரிக்கா போட்டியை முடித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் கொண்டாட்டம்

அதே வேளையில் எதாவது அதிசயம் நடந்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்புள்ளது. தென்னாப்பிரிக்கா அணி இதுவரை எந்த ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை. இப்போது முதல் கோப்பையை வாங்கும் விளிம்பில் தென்னாப்பிரிக்கா உள்ளதால் அந்த அணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.