உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற ஆஸ்திரேலிய அணி 282 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. மிட்ச்செல் ஸ்டார்க் சூப்பர் அரை சதம் அடித்து ஆஸ்திரேலியாவை சரிவில் இருந்து மீட்டார்.
ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்டீவ் ஸ்மித் 112 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்தார். பியூ வெப்ஸ்டர் 92 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் கசிசோ ரபாடா 5 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.
தென்னாப்பிரிக்கா 138 ரன்களுக்கு ஆல் அவுட்
பின்பு தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியும் வெறும் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் டேவிட் பெடிங்ஹாம் (45 ரன்), கேப்டன் டெம்பா பவுமா (36) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை அள்ளினார். மிட்ச்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் ஜோஷ் ஹேசல்வுட் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சேன் அடுத்தடுத்து அவுட்
இதனால் 74 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் ரபாடா மற்றும் லுங்கி இங்கிடி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நிலைகுலைந்து போனார்கள். உஸ்மான் கவாஜா(6), கேமரூன் கிரீன் (0), மார்னஸ் லபுஸ்சேன் (22), முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித் (13) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
148க்கு 9 என தள்ளாடிய ஆஸ்திரேலியா
மேலும் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் (9), முதல் இன்னிங்சில் அரைதம் விளாசிய வெப்ஸ்டர் (9), பேட் கம்மின்ஸ் (6) என ஆஸ்திரேலியா வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்ததால் 73/7 என பரிதவித்தது. பின்பு ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரியும், ஸ்டார்க்கும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 134 ஆக உயர்ந்தபோது சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அலெக்ஸ் கேரி 43 ரன்னில் ரபாடா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். பின்னர் வந்த நாதன் லயனும் (2) நிலைக்கவில்லை. ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்து தள்ளாடியது.
ஆஸ்திரேலியாவை மீட்ட ஸ்டார்க்
இதனால் மீதமிருக்கும் ஒரு விக்கெட்ட்டையும் விரைவில் வீழ்த்தி குறைந்த இலக்கை சேஸ் செய்யலாம் என தென்னாப்பிரிக்கா பவுலர்கள் திட்டமிட்டனர். ஆனால் கடைசி விக்கெட்டுக்கு கைகோர்த்த ஸ்டார்க்கும், ஹேசில்வுட்டும் இவர்களின் கணிப்பை தவிடுபொடியாக்கினார்கள். ஒரு பக்கம் ஸ்டார்க் பவுண்டரிகளாக விளாச, ஹேசில்வுட் அவருக்கு பக்க பலமாக விளங்கினார். ரபாடா, மார்கோ ஜான்சன், லுங்கி இங்கிடி என அனைத்து பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.
ஸ்டார்க் அரை சதம்
பிட்ச் கொஞ்சம் பேட்டிங்குக்கு ஏதுவாக மாறியதால் தென்னாப்பிரிக்கா பவுலர்கள் திண்டாடி போனார்கள். தொடர்ந்து அட்டகாசமாக விளையாடிய ஸ்டார்க் டெஸ்ட் போட்டிகளில் முதன் முறையாக 100 பந்துகளுக்கு மேல் சந்தித்து முக்கியமான அரை சதம் விளாசினார். பாஸ்ட் பவுலர்களை வைத்து இவர்களை வீழ்த்த முடியாததால் தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா பார்ட் டைம் ஸ்பின் பவுலரான மார்க்ரமை கொண்டு வந்தார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. நன்றாக விளையாடிய ஹேசில்வுட் 53 பந்தில் 2 பவுண்டரியுடன் 17 ரன்கள் கொடுத்து மார்க்ரம் பந்தில் கேஷவ் மகாராஜாவிடம் கேட்ச் ஆனார். இந்த விக்கெட் மூலம் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்கு
ஸ்டார்க்கும், ஹேசில்வுட்டும் கடைசி விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் ராபாடா 4 விக்கெட்டும், லுங்கி இங்கிடி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இதன்மூலம் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற 282 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடைசி கட்டத்தில் பிட்ச் பேட்டிங்குக்கு ஏதுவாக மாறியதால் தென்னாப்பிரிக்கா அணி 282 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே வேளையில் பவுலர்களுக்கு தொடக்கத்தில் ஸ்விங் இருக்கும் என்பதால் ஆஸ்திரேலியாவின் கையும் ஓங்கி இருக்கிறது. சவாலான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்கிறது.
