தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

WTC Final 2025: Australia All Out For Just 212 Runs: ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 20 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ரபாடா பந்தில் பெடிங்ஹாமிடம் கேட்ச் ஆனார்.

ரபாடா வேகத்தில் சரிந்த ஆஸ்திரேலியா

அடுத்து களமிறங்கிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் வெறும் 4 ரன்னில் ரபாடாவின் வேகத்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு சிறிது நேரம் தாக்குப்பிடித்த மார்சன்ஸ் லபுஸ்சேனை (17 ரன்) மார்கோ ஜான்சன் காலி செய்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. மேகமூட்டமான சூழல் பாஸ்ட் பவுலிங்குக்கு கைகொடுத்ததால் அதை தென்னாப்பிரிக்கா பவுலர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். இதன்பிறகு அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட்டும் (11 ரன்) மார்கோ ஜான்சன் வேகத்தில் நடையை கட்டினார்.

ஸ்டீபன் ஸ்மித் அரைசதம்

ஆஸ்திரேலிய அணி 67/4 என தத்தளித்த நிலையில், அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஸ்டீபன் ஸ்மித்தும், பியூ வெப்ஸ்டரும் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்ட்டனர். தனக்கே உரித்தான டிரேட் மார்க் ஷாட்களை அடித்து பவுண்டரிகளை ஓடவிட்ட ஸ்டீபன் ஸ்மித் சூப்பரான அரைசதம் விளாசினார். மறுபக்கம் பியூ வெப்ஸ்டர் அதிரடியாக விளையாடினார். அணியின் ஸ்கோர் 146 ரன்களாக உயர்ந்தபோது இந்த ஜோடியை மார்க்கரம் பிரித்தார்.

சூப்பராக விளையாடிய வெப்ஸ்டர்

112 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீபன் ஸ்மித் மார்க்கரம் பந்தில் ஜான்சனிடம் கேட்ச் ஆனார். இதன்பிறகு வெப்ஸ்டருடன் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரியும் பொறுப்புடன் விளையாடினார். ஆனாலும் அலெக்ஸ் கேரி (23 ரன்), கேப்டன் பேட் கம்மின்ஸ் (1) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் தனி ஆளாக போராடி அரை சதம் அடித்த பியூ வெப்ஸ்டர் 92 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் அவுட் ஆனார்.

ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்

இறுதியில் ரபாடா, ஜான்சன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மிட்ச்செல் ஸ்டார்க் (1), நாதன் லயன் (0) அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். முதல் நாளில் வெறும் 56.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி வெறும் 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்கா தரப்பில் கசிசோ ரபாடா 5 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். பின்பு தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் கேட்ச் ஆனார்.