ஐபிஎல் 13வது சீசன் நடப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய ஐபிஎல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் மாதம் தொடங்கியிருக்க வேண்டிய டி20 உலக கோப்பை ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதால், செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரையிலான காலக்கட்டத்தில் ஐபிஎல்லை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

எனவே ஐபிஎல் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குவது உறுதியாகிவிட்டதால், அதற்கான வேலைகளில் பிசிசிஐ-யும் ஐபிஎல் நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது. வீரர்களும் பயிற்சிகளை தொடங்கிவிட்டனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து வீரர்களை ஐபிஎல்லில் ஆட அந்நாடுகள் அனுமதித்துள்ளன. 

ஆனால் தென்னாப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால், அந்நாட்டில் ஆகஸ்ட் மாத இறுதிவரை வெளிநாட்டு போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் அடுத்த மாதம் நடக்கும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஆடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

எனவே தென்னாப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல்லின் தொடக்கத்தில் சில போட்டிகளில் ஆடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை கலைந்து அவர்களை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்துவர ஐபிஎல் நிர்வாகம் முயற்சி செய்யும். ஆனாலும் தொடக்கத்தில் சில போட்டிகளில் ஆடமுடியாத சூழல் ஏற்பட்டால், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்குத்தான் பெரும் பாதிப்பாக அமையும். 

ஆர்சிபி அணியின் இரண்டு தூண்களில் ஒருவர் டிவில்லியர்ஸ். விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸை நம்பித்தான் ஆர்சிபி அணியே உள்ளது. அவர் மட்டுமல்லாது ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் மற்றும் ஃபாஸ்ட் பவுலர் டேல் ஸ்டெய்ன் ஆகியோரும் ஆர்சிபி அணியில் உள்ளனர். கிறிஸ் மோரிஸை இந்த சீசனுக்கான ஏலத்தில் அதிக விலை கொடுத்து ஆர்வத்துடன் எடுத்தது ஆர்சிபி அணி. இந்நிலையில், அவர்கள் ஆடமுடியாத சூழல் ஏற்பட்டால் அது ஆர்சிபி அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும். ஏற்கனவே கோப்பையை வெல்லாத விரக்தியில் இருக்கும் ஆர்சிபி அணி, முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள நிலையில், இப்படி மட்டும் நடந்தால், அது ஆர்சிபி அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும். 

சிஎஸ்கே அணியில் டுப்ளெசிஸ், இம்ரான் தாஹிர், லுங்கி இங்கிடி ஆகிய அந்த அணியின் முக்கியமான வீரர்கள் தென்னாப்பிரிக்க வீரர்களே. மும்பை இந்தியன்ஸ் அணியில் குயிண்டன் டி காக்கும், ராஜஸ்தான் அணியில் டேவிட் மில்லரும், டெல்லி அணியில் காகிசோ ரபாடாவும் ஆடுகின்றனர்.