இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடர்களையும் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி வென்றது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மட்டும் எஞ்சியுள்ளது. 

அதன்பின்னர் இந்திய அணி நாடு திரும்பியதும், தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு வந்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. தென்னாப்பிரிக்க அணி உலக கோப்பைக்கு பின்னர் ஆடும் முதல் தொடர் இந்தியாவுக்கு எதிரானதுதான். 

செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் இந்த தொடர் தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய சுற்றுப்பயணத்திற்கான டி20 மற்றும் டெஸ்ட் அணிகளை தென்னாப்பிரிக்க அணி அறிவித்துள்ளது.

குயிண்டன் டி காக் தலைமையிலான டி20 அணியில் ஜூனியர் டாலா, ஹெண்ட்ரிக்ஸ், மில்லர், நோர்ட்ஜே, ஃபெலுக்வாயோ, ப்ரிடோரியஸ், ரபாடா மற்றும் ஸ்பின்னர் ஷாம்ஸி ஆகியோர் உள்ளனர். 

ஃபாஃப் டு ப்ளெசிஸ் தலைமையிலான டெஸ்ட் அணியில் டி காக், எல்கர், மஹாராஜ், மார்க்ரம், ப்ருய்ன் ஆகியோர் உள்ளனர். டெஸ்ட்  அணியில் நோர்ட்ஜே, ருடி செகண்ட் மற்றும் செனுரான் முத்துசாம் ஆகிய மூவரும் முதன்முறையாக இடம்பிடித்துள்ளனர். 

ஆம்லா, டிவில்லியர்ஸ், டேல் ஸ்டெய்ன் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய தலைசிறந்த வீரர்கள் யாருமே இல்லாமல், தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது. டிவில்லியர்ஸ் கடந்த ஆண்டு ஓய்வு அறிவித்த நிலையில், ஸ்டெய்ன் மற்றும் ஆம்லா ஆகிய இருவரும் அண்மையில் ஓய்வு அறிவித்தனர். நீண்ட காலமாக தென்னாப்பிரிக்க அணியின் தூண்களாக இருந்துவந்த வீரர்கள் யாருமே இல்லாமல் இந்தியாவை எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்கா. 

தென்னாப்பிரிக்க டி20 அணி:

குயிண்டன் டி காக்(கேப்டன்), வாண்டெர் டசன்(துணை கேப்டன்), பவுமா, ஜூனியர் டாலா, ஃபார்டுயின், பியூரன் ஹென்ரிக்ஸ், ரீஸா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், நோர்ட்ஜே, ஃபெலுக்வாயோ, ப்ரிடோரியஸ், ரபாடா, ஷாம்ஸி, ஸ்மட்ஸ்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி:

ஃபாஃப் டு ப்ளெசிஸ்(கேப்டன்), டெம்பா பவுமா(துணை கேப்டன்), டி ப்ருய்ன், குயிண்டன் டி காக், எல்கர், ஹாம்ஸா, கேஷவ் மஹாராஜ், மார்க்ரம், முத்துசாமி, இங்கிடி, நோர்ட்ஜே, ஃபிலாண்டர், டேன் பியெட், ரபாடா, ருடி செகண்ட்.