ஆஸ்திரேலியாவை சக்கையாக பிழிந்த கிளாசென்: 83 பந்தில் 13 பவுண்டரி, 13 சிக்ஸருடன் 174 ரன்கள் குவித்து சாதனை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடி 174 ரன்கள் குவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா முதலில் முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், ஆஸ்திரேலியா 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில், நடந்து முடிந்த 3 ஒரு நாள் போட்டிகளில் முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 3ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன.
Bangladesh vs India: ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட் கைப்பற்றி ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை!
தற்போது இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது ஒரு நாள் போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா முதலில் ஆடியது. இதில் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் மற்றும் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 64 ரன்கள் சேர்த்தது.
இதில், ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 28 ரன்களில் கிளீன் போல்டானார். அடுத்து வான் டெர் டூசென் களமிறங்கினார். அவர் நிதானமாக ரன்கள் சேர்த்தார். இதற்கிடையில் மற்றொரு தொடக்க வீரர் டி காக் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் எய்டன் மார்க்ரம் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது தென் ஆப்பிரிக்கா அணி 25.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து தான், ஹென்ரிச் கிளாசென் களமிறங்கினார். இவரும், டூசெனும் இணைந்து ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் டூசென் அரைசதம் அடித்த நிலையில், 62 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேவிட் மில்லர் கிளாசெனுடன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதில், 32 ஓவர்கள் முடிவில் கிளாசென் 25 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தார்.
அதன் பிறகு, கிளாசென் ருத்ரதாண்டம் ஆடினார். ஜம்பாவின் ஒரு ஓவரில் மட்டும் 26 ரன்கள் எடுத்தார். ஓவருக்கு சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசித் தள்ளினார். ஜம்பா 10 ஓவர்கள் வீசி விக்கெட் இழப்பின்றி 113 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இறுதியாக கிளாசென் 83 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்ஸர்கள் உள்பட 174 ரன்கள் குவித்து 50ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் குறைந்தபந்துகளில் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். ஒரு நாள் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் கிளாசென் இணைந்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஏபி டிவிலியர்ஸ் 16 சிக்ஸர்கள் உடன் முதலிடத்தில் உள்ளார். 5ஆவதாக களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். 5ஆவது விக்கெட்டிற்கு அதிகபட்சமாக 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்துள்ளனர். கடைசியாக தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு அதிகபட்சமாக 416 ரன்கள் குவித்தது.
பந்து வீச்சு தரப்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 10 ஓவர்களில் வீசி ஒரு விக்கெட் ஒரு மெய்டன் உள்பட 81 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஹசல்வுட் 79 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். நாதன் எல்லிஸ் 79 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஒரு விக்கெட் கைப்பற்றினார். நேசர் ஒரு விக்கெட் எடுத்தார்.