விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக மயன்க் அகர்வால் 215 ரன்களையும் ரோஹித் சர்மா 176 ரன்களையும் குவித்தனர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, முதல் 4 விக்கெட்டுகளை விரைவில் இழந்தது. ஆனால் அதன்பின்னர் எல்கரும் டுப்ளெசிஸும் இணைந்து அபாரமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அரைசதம் அடித்த டுப்ளெசிஸ் 55 ரன்களில் ஆட்டமிழக்க, எல்கர் அபாரமாக ஆடி சதமடித்தார். டுப்ளெசிஸ் விக்கெட்டுக்கு பிறகு எல்கருடன் ஜோடி சேர்ந்த டி காக்கும் சிறப்பாக ஆடினார். 

150 ரன்களை கடந்த எல்கரை 160 ரன்களில் ஜடேஜா வீழ்த்தினார். இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த அவரது விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் ஜடேஜா. இது ஜடேஜாவின் 200வது டெஸ்ட் விக்கெட். எல்கர் அவுட்டானாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டி காக்கும் சதம் விளாசினார். 

சதத்திற்கு பின்னரும் நன்றாக ஆடிக்கொண்டிருந்த டி காக்கை பக்காவா பிளான் பண்ணி தூக்கினார் அஷ்வின். அஷ்வினின் பந்தில் டி காக் 111 ரன்களில் கிளீன் போல்டாகி வெளியேறினார். இது அஷ்வினின் திட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இரண்டு பந்துகளை நன்றாக திரும்புமாறு சுழற்றிவிட்ட அஷ்வின், அடுத்த பந்தை டர்ன் செய்யாமல் நேராக செல்லுமாறு வீசினார். ஆனால் அதை சற்றும் எதிர்பார்த்திராத டி காக், பந்து பிட்ச்சான பின் திரும்பினால் எந்த ஆங்கிளில் செல்லுமோ, அதற்கேற்றவாறு கணித்து பேட்டை வைத்திருந்தார். ஆனால் பந்து டர்ன் ஆகாமல் நேராக சென்று ஸ்டம்பை அடித்தது.

டி காக்கை தொடர்ந்து ஃபிளாண்டரையும் அஷ்வின் வீழ்த்தினார். மூன்றாவது நாள் ஆட்டமுடிவில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்களை அடித்துள்ளது. முத்துசாமியும் கேசவ் மஹராஜும் களத்தில் உள்ளனர். நேற்றைய ஆட்டமுடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் அடித்திருந்த தென்னாப்பிரிக்க அணி, இன்றைய நாள் முழுவதுமாக ஆடி, வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 346 ரன்களை குவித்தது. இன்றைய நாள் தென்னாப்பிரிக்காவுடையது.