T20 World Cup: நெதர்லாந்திடம் தோற்று தொடரைவிட்டு வெளியேறியது தென்னாப்பிரிக்கா! அரையிறுதிக்கு இந்தியா தகுதி
டி20 உலக கோப்பையில் நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியது. தென்னாப்பிரிக்கா தோற்றதால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் - வங்கதேசம் போட்டியில் ஜெயிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் க்ரூப் 1லிருந்து நியூசுலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், க்ரூப் 2லிருந்து அரையிறுதிக்கு முன்னேற நெதர்லாந்தை வீழ்த்தினால் போதும் என்ற சூழலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
தென்னாப்பிரிக்கா - நெதர்லாந்து இடையேயான போட்டி இன்று அடிலெய்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
தென்னாப்பிரிக்க அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன், வைன் பார்னெல், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி.
முதலில் பேட்டிங் ஆடிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் மைபர்க்(37) மற்றும் ஓடௌட் (29) நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதன்பின்னர் டாம் கூப்பர் மற்றும் ஆக்கர்மேன் அதிரடியாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். டாம் கூப்பர் 19 பந்தில்35 ரன்களும், ஆக்கர்மேன் 26 பந்தில் 41 ரன்களும் அடிக்க, நெதர்லாந்து அணி 20 ஓவரில் 158 ரன்கள் அடித்தது.
159 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் முக்கியமான வீரர்களான குயிண்டன் டி காக்(13), டெம்பா பவுமா(20), ரைலீ (25), மார்க்ரம்(17) மற்றும் டேவிட் மில்லர்(17), ஹென்ரிச் கிளாசன்(21) யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அனைவருமே கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 145 ரன்கள் அடித்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா, 5 புள்ளிகளுடன் தொடரை விட்டு வெளியேறியது.
ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணி கழட்டிவிடும் 2 வீரர்கள் இவர்கள் தான்..!
தென்னாப்பிரிக்கா வெளியேறியதால் 6 புள்ளிகளை பெற்றிருந்த இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. தலா 4 புள்ளிகளை பெற்றுள்ள பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் அடுத்த போட்டியில் மோதுகின்றன. அந்த போட்டியில் ஜெயிக்கும் அணி க்ரூப் 2லிருந்து 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும். இந்திய அணி கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது.