இந்திய அணி அவரை ஆடவைத்து ரிஷப் பண்ட்டை உட்காரவைப்பது பெரும் தவறு! ஆஸி., முன்னாள் கேப்டன் கடும் விளாசல்
இந்திய அணி ரிஷப் பண்ட்டை உட்காரவைத்துவிட்டு தினேஷ் கார்த்திக்கை ஆடவைப்பது அபத்தமானது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் விமர்சித்துள்ளார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. க்ரூப் 2லிருந்து இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்த உலக கோப்பையில் பும்ரா, ஜடேஜா ஆகிய முன்னணி வீரர்கள் ஆடாதபோதிலும், இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகிறது. இந்திய அணி இந்த உலக கோப்பையில் சிறப்பாக ஆடினாலும், நம்பி அணியில் எடுக்கப்பட்ட தினேஷ் கார்த்திக் இன்னும் இந்த உலக கோப்பையில் அவரது சேர்ப்பை நியாயப்படுத்தவில்லை.
டி20 உலக கோப்பை: முக்கியமான போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்ளும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்
தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் ஆகிய 2 விக்கெட் கீப்பர்கள் அணியில் எடுக்கப்பட்டனர். இவர்களில் தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணி முன்னுரிமை கொடுத்து ஆடும் லெவனில் எடுக்கிறது. டி20 உலக கோப்பை தொடங்குவதற்கு முன், தினேஷ் கார்த்திக்கைத்தான் இந்திய அணி விக்கெட் கீப்பராக ஆடவைக்கப்போகிறது என்பது தெரிந்து இந்திய முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு முன்னாள் வீரர்களும் கூட, ரிஷப் பண்ட்டை உட்காரவைத்துவிட்டு தினேஷ் கார்த்திக்கை ஆடவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களின் கருத்தை நியாயப்படுத்துவதைப் போலத்தான் தினேஷ் கார்த்திக் டி20 உலக கோப்பையில் ஆடிவருகிறார். அவர் இதுவரை ஒரு நல்ல இன்னிங்ஸ் கூட ஆடவில்லை. விக்கெட் கீப்பிங்கிலும் சராசரிதான்; மிகச்சிறப்பான விக்கெட் கீப்பிங் என்றெல்லாம் சொல்லமுடியாது.
இந்திய அணி அடுத்ததாக அரையிறுதி போட்டியில் ஆடவுள்ள நிலையில், ரிஷப் பண்ட்டை உட்காரவைத்துவிட்டு தினேஷ் கார்த்திக்கை ஆடவைப்பதை கடுமையாக விமர்சித்துள்ளார் ஆஸி., முன்னாள் கேப்டன் இயன் சேப்பல்.
தினேஷ் கார்த்திக்கை இந்திய அணி ஆடவைப்பது போன்ற தவறை, டிம் டேவிட்டை ஆடவைத்து ஆஸ்திரேலிய அணியும் செய்தது. அதை சுட்டிக்காட்டும்போதுதான் இந்திய அணியின் தவறையும் இயன் சேப்பல் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய இயன் சேப்பல், டிம் டேவிட் சர்வதேச கிரிக்கெட்டில் என்ன ஆடியிருக்கிறார்? சில சமயங்களில் தேர்வாளர்கள், வீரர்களின் உள்நாட்டு ஃபார்மை வைத்து அவர்களை சர்வதேச கிரிக்கெட்டில் அதுவும் பெரிய தொடர்களில் ஆடவைக்கின்றனர். அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, இந்திய அணி. ரிஷப் பண்ட்டை பென்ச்சில் உட்காரவைத்துவிட்டு தினேஷ் கார்த்திக்கை ஆடவைக்கின்றனர். இது அபத்தமானது. ரிஷப் பண்ட் இந்த உலக கோப்பை தொடங்கியதிலிருந்து அனைத்து போட்டிகளிலும் ஆடியிருக்க வேண்டும் என்று இயன் சேப்பல் விமர்சித்துள்ளார்.