டி20 உலக கோப்பை: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து.! தொடரைவிட்டு வெளியேறியது ஆஸ்திரேலியா
டி20 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இங்கிலாந்தின் வெற்றியால் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி தொடரை விட்டு வெளியேறியது.
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 1ன் முக்கியமான போட்டியில் இங்கிலாந்தும் இலங்கையும் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்தில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அதேவேளையில், இந்த போட்டியில் இலங்கை ஜெயித்தால் தான் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற சூழல் இருந்தது.
க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், அந்த க்ரூப்பிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறும் 2வது அணி எதுவென்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் இங்கிலாந்தும் இலங்கையும் மோதின. சிட்னியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இலங்கை அணி:
பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, சாமிகா கருணரத்னே, லஹிரு குமாரா, கசுன் ரஜிதா.
இங்கிலாந்து அணி:
ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், அடில் ரஷீத், மார்க் உட்.
முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிசங்காவும் குசால் மெண்டிஸும் அதிரடியாக தொடங்கினர். குசால் மெண்டிஸ் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஒருமுனையில் பதும் நிசாங்கா இங்கிலாந்து பவுலிங்கை அடித்து ஆட, மறுமுனையில் தனஞ்செயா டி சில்வா(9), சாரித் அசலங்கா (8) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்.
அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பதும் நிசாங்கா 45 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 67 ரன்களை குவித்து 16வது ஓவரில் ஆட்டமிழந்தார். நிசாங்கா ஆட்டமிழந்த போது இலங்கை அணியின் ஸ்கோர் 16.3 ஓவரில் 118 ரன்கள். அதன்பின்னர் 21 பந்துகளில் இலங்கை அணியால் 23 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. பானுகா ராஜபக்சா 22 ரன் மட்டுமே அடித்தார். அதிரடியாக தொடங்கிய இலங்கை அணியின் ஃபினிஷிங் மோசமாக இருந்ததால் 20 ஓவரில் 141 ரன்கள் மட்டுமே அடித்தது.
142 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஜோஸ் பட்லர் 23 பந்தில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதிரடியாக அடித்து ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் 30 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹாரி ப்ரூக் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் தலா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மொயின் அலியும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடி 36 பந்தில் 42 ரன்கள் அடித்து கடைசி வரை நின்று போட்டியை முடித்து கொடுத்தார். அதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 7 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது. 7 புள்ளிகளை பெற்றிருந்தாலும், குறைவான ரன்ரேட்டின் காரணமாக ஆஸ்திரேலிய அணி டி20 உலக கோப்பையை விட்டு வெளியேறியது.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதிக்குக்கூட முன்னேறாமல் வெளியேறியது ஆஸ்திரேலிய அணி.