ENG vs SA: ஷம்ஸி 5 விக்கெட்.. 3வது டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 2-1 என டி20 தொடரை வென்றது.
தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனில் இருந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி சௌத்தாம்ப்டனில் நடந்தது.
இந்த போட்டியில் ஜெயித்தால் தான் தொடரை வெல்ல முடியும் என்பதால் இரு அணிகளும் வெற்றி முனைப்பில் களமிறங்கின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி:
ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், ரீஸ் டாப்ளி.
தென்னாப்பிரிக்க அணி:
குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ரிக்ஸ், ரிலீ ரூசோ, மார்க்ரம், டேவிட் மில்லர் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஆண்டில் ஃபெலுக்வாயோ, கேஷவ் மஹராஜ், அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி, ஷாம்ஸி.
முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டி காக் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானாலும், மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹென்ரிக்ஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 50 பந்தில் 9 பவுண்டரிகளுடன் 70 ரன்களை குவித்தார்.
3ம் வரிசையில் இறங்கிய ரிலீ ரூசோ அதிரடியாக ஆடி 18 பந்தில் 31 ரன்கள் அடித்தார். கேப்டன் டேவிட் மில்லர் 9 பந்தில் 22 ரன்கள் அடித்தார். மார்க்ரம் பொறுப்புடன் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். மார்க்ரம் 36 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார். 20 ஓவரில் 191 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்க அணி.
192 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் (17), ஜோஸ் பட்லர் (14), டேவிட் மலான்(7), பேர்ஸ்டோ (27), மொயின் அலி(3), லிவிங்ஸ்டோன்(3), சாம் கரன் (9) என அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 16.4 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்க அணியில் அபாரமாக பந்துவீசி ஷம்ஸி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 2-1 என டி20 தொடரை வென்றது.