வங்கதேச அணி நிர்ணயித்த 195 ரன்கள் என்ற எளிய இலக்கை 38வது ஓவரிலேயே அடித்து தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக அந்த அணியை ஒருநாள் கிரிக்கெட்டில் வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று சாதனை படைத்தது வங்கதேச அணி.

2வது ஒருநாள் போட்டி இன்று ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது.

முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 314 ரன்களை குவித்த நம்பிக்கையில் இந்த போட்டியிலும் முதலில் பேட்டிங் ஆடியது வங்கதேச அணி. ஆனால் வங்கதேச அணியில் அஃபிஃப் ஹுசைனைத் தவிர மற்ற யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை.

தொடக்க வீரர் தமீம் இக்பால் (1), சீனியர் வீரர் ஷகிப் அல் ஹசன்(0), மற்றொரு தொடக்க வீரரான லிட்டன் தாஸ் (16), முஷ்ஃபிகுர் ரஹீம் (11), யாசிர் அலி (2) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 34 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது வங்கதேச அணி.

அதன்பின்னர் மஹ்மதுல்லா 25 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் அஃபிஃப் ஹுசைன் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 72 ரன்களை குவித்து வங்கதேச அணியின் ஸ்கோரை ஓரளவிற்கு உயர்த்தினார். மெஹிடி ஹசன் 38 ரன்கள் அடித்தார். அதனால் 50 ஓவரில் 194 ரன்களை அடித்த வங்கதேச அணி 195 ரன்கள் என்ற எளிய இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது.

195 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் மற்றும் 3ம் வரிசையில் இறங்கிய கைல் வெரெய்ன் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். டி காக் அதிரடியாக பேட்டிங் ஆடி 41 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் அடித்தார். கைல் வெரெய்ன் 58 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்தார். 38வது ஓவரில் இலக்கை எட்டி தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஒருநாள் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. கடைசி ஒருநாள் போட்டி தான் தொடரின் முடிவை தீர்மானிக்கும்.