ஐபிஎல் 15வது சீசனை எங்கே நடத்துவது என்ற பிசிசிஐயின் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் கங்குலி. 

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இணைவதால் 10 அணிகள் இந்த சீசனில் ஆடவுள்ளன. இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. அதனால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தன. 

மெகா ஏலத்துக்கு முன்பாக புதிய அணிகள் இரண்டும் தலா 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம். அதன்படி, லக்னோ அணி கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும், அகமதாபாத் அணி ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் எடுத்துள்ளன.

ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலத்தில் பெரிய வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதால் இந்த ஏலத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 1214 வீரர்கள் ஏலத்திற்கு பெயர்களை பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 590 வீரர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளனர். வரும் 12-13 ஆகிய தேதிகளில் ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் நடக்கவுள்ளது. 

மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2 ஐபிஎல் சீசன்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. அதனால் ஐபிஎல்லை இம்முறை இந்தியாவில் நடத்த விரும்புகிறது பிசிசிஐ. ஐபிஎல் அணிகளுடனான ஆலோசனைக்கூட்டத்தில் ஐபிஎல் அணிகளும் பிசிசிஐயிடம் இந்த முறை ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்தவேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, கொரோனா அச்சுறுத்தல் பெரிதாக இல்லையென்றால் இந்த சீசன் இந்தியாவில் நடத்தப்படும். ஆனாலும் லீக் போட்டிகளை நிறைய இடங்களில் நடத்தாமல் மகாராஷ்டிராவில் மட்டுமே நடத்த திட்டமிட்டுள்ளோம். மும்பை மற்றும் புனேவில் லீக் போட்டிகள் நடத்தப்படும். நாக் அவுட் போட்டிகளை எங்கே நடத்துவது என்பது குறித்து பின்னர் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று கங்குலி தெரிவித்தார்.