சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் திகழ்ந்துவருகின்றனர். 

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் சாதனைகளை குவித்துவருகிறார். ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடி 7 இன்னிங்ஸ்களில் 774 ரன்களை குவித்தார் ஸ்டீவ் ஸ்மித். 

7 இன்னிங்ஸ்களில் ஒரு இரட்டை சதம், 2 சதங்கள், 3 அரைசதங்கள் என ஆஷஸ் தொடர் முழுவதுமே அசத்தலாக ஆடினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவில் 26 சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். ஆஷஸ் கிரிக்கெட்டில் டான் பிராட்மேனின் சாதனையையே மிஞ்சுமளவிற்கு ஆடினார்.

விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார். ஸ்மித் தடையில் இருந்த சமயத்தில், கோலி முதலிடத்தில் நீடித்த நிலையில், ஸ்மித் திரும்ப வந்து, ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடி முதலிடத்தை பிடித்துவிட்டார். 

இந்நிலையில், ஸ்மித் - கோலி ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்வி பல முன்னாள் ஜாம்பவான்களிடம் எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த கேள்வி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடமும் கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த கங்குலி, இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்காதீங்க.. எதனடிப்படையில் தேர்வு செய்வது..? அவர்களின் ஆட்டத்தின் அடிப்படையில்தான் இதை முடிவு செய்ய முடியும். இருவருமே நல்ல பேட்ஸ்மேன்கள் தான். ஆனால் தற்போதைய சூழலில் விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன். அதுதான் நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஸ்மித்தின் ரெக்கார்டே அவரது திறமைக்கு சான்று. 26 டெஸ்ட் சதங்கள் எல்லாம் சாதாரண விஷயமல்ல. பெரிய சாதனை என்று என்று கங்குலி தெரிவித்துள்ளார்.