விராட் கோலியின் கேப்டன்சி விமர்சிக்கப்பட்டாலும், அவரது கேப்டன்சியின் கீழ் இந்திய அணி வெற்றிகளை குவித்துக்கொண்டிருக்கிறது. விராட் கோலி இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக திகழ்கிறார். 

விராட் கோலி ஆடாத தொடர்களில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பலராலும் புகழப்பட்டுவருகிறது. அதேபோலவே அவரும் கேப்டனாக செயல்பட கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு தனது கேப்டன்சி திறமையை நிரூபித்துள்ளார். நிதாஹஸ் டிராபி, ஆசிய கோப்பை என ரோஹித் சர்மாவின் தலைமையில் ஆடிய அனைத்து தொடர்களையும் இந்திய அணி வென்றுள்ளது. 

வங்கதேசத்துக்கு எதிராக நடந்துவரும் டி20 தொடரிலும் ரோஹித் சர்மா தான் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். உலக கோப்பை தோல்வியை அடுத்து, ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலியை நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. அதை உறுதி செய்யும் விதமாக, ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன்சி பொறுப்பை ரோஹித் சர்மாவிடம் பிசிசிஐ கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. 

ஆனால் விராட் கோலி தான் மூன்றுவிதமான அணிகளுக்கும் கேப்டனாக தொடர்ந்துவருகிறார். இந்நிலையில், புதிதாக பிசிசிஐயின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கங்குலி, இதுகுறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த கங்குலி, வெவ்வேறு வடிவங்களுக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமிப்பது குறித்து இப்போதைக்கு பேச வேண்டிய அவசியமே கிடையாது என கங்குலி நறுக்குனு பதிலளித்துவிட்டார். 

வெவ்வேறு வடிவங்களுக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமித்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அணிகள் சிறப்பகவே செயல்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்கு அது சரியாக வருமா என்பது சந்தேகம்தான். அதுவும் இப்போதிருக்கும் இந்திய அணியில் அது சாத்தியமில்லை. அதுமட்டுமல்லாமல் அதற்கான அவசியமும் இல்லை.