ஒருநாள் உலக கோப்பையை ஜெயிக்கணும்னா இதை செய்யுங்க..! ரோஹித், டிராவிட்டுக்கு தாதா தரமான அறிவுரை
ஒருநாள் உலக கோப்பையை ஜெயிக்க இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வாளர்களுக்கு சௌரவ் கங்குலி அறிவுரை கூறியுள்ளார்.
இந்திய அணி 2013ம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி கோப்பையை ஜெயித்ததே இல்லை. 2011ல் ஒருநாள் உலக கோப்பையை வென்ற இந்திய அணி, 2013ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதன்பின்னர் 2014 டி20 உலக கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் ஃபைனல் வரை சென்று கோப்பையை இழந்தது.
2019 ஒருநாள் உலக கோப்பையில் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று தொடரை விட்டு வெளியேறிய இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்தது.
2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் நடந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த தொடர்களிலும் தோற்று இந்திய அணி ஏமாற்றமளித்தது. 2022 டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து அதிருப்தியளித்தது.
இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால், ஒரு உலக கோப்பையை வெல்ல வேண்டியது அவசியம். அந்தவகையில், இந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை இந்தியாவில் நடப்பதால், சொந்த மண்ணில் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதற்காக பிசிசிஐ 20 வீரர்களை ஷார்ட்லிஸ்ட் செய்து, அந்த வீரர்கள் சுழற்சி முறையில் களமிறக்கப்பட்டுவருகின்றனர்.
ரோஹித், ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா என பேட்டிங் ஆர்டர் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் சாஹல், குல்தீப் ஆகியோரும் உள்ளனர். இவர்களில் இருவர் அல்லது மூவருக்குத்தான் அணியில் ஆட வாய்ப்பு கிடைக்கும். ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பொறுத்தமட்டில், உலக கோப்பை இந்தியாவில் நடப்பதால் புவனேஷ்வர் குமாருக்கு இடம் இல்லை. பும்ரா நம்பர் 1 பவுலர். அவருடன் ஷமி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், ஷிவம் மாவி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஒன்று அல்லது 2 இடங்களுக்கு போட்டி போடுகின்றனர்.
இந்திய அணியில் வீரர்கள் ஏராளமாக உள்ளனர். ஒரே சமயத்தில் 2 வெவ்வேறு போட்டிகளில் ஆடுமளவிற்கு இந்திய அணியிடம் திறமையான வீரர்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணி குறித்து பேசிய சௌரவ் கங்குலி, இந்திய அணி எப்போதுமே பலவீனமான அணியாக இருந்தது கிடையாது. இந்தியாவில் ஏகப்பட்ட திறமையான வீரர்கள் உள்ளனர். அணியிலுள்ள வீரர்களில் பாதி பேருக்கு மேல் ஆட வாய்ப்பே கிடைக்கவில்லை. அந்தளவிற்கு ஏகப்பட்ட வீரர்கள் உள்ளனர். ராகுல் டிராவிட், ரோஹித் சர்மா, தேர்வாளர்களுக்கு என்னுடைய ஆலோசனை என்னவென்றால், அணியை மாற்றாமல் இதே அணி காம்பினேஷனுடன் உலக கோப்பை வரை ஆடவேண்டும். உலக கோப்பையை ஜெயிப்பதை பற்றியெல்லாம் யோசிக்காமல் பயமில்லாமல் துணிச்சலாக ஆடவேண்டும்.
ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகிய சிறந்த வீரர்கள் அடங்கிய இந்திய அணி மோசமான அணியாக இருக்கவே முடியாது என்று கங்குலி தெரிவித்தார்.