இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி, ஸ்டீவ் ஸ்மித்தின் அபார சதம்(131), லபுஷேனின் சிறப்பான அரைசதம்(91) மற்றும் அறிமுக வீரர் வில் புகோவ்ஸ்கியின் அரைசதம்(62) ஆகியவற்றால் ஆஸி., அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் அடித்துள்ளது இந்திய அணி. தொடக்க வீரர் ரோஹித் சர்மா 26 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் ஷுப்மன் கில், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் அரைசதம் அடித்தார். கில் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரஹானேவும் புஜாராவும் களத்தில் இருந்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆஸி.,க்கு எதிரான போட்டி என்றாலே, ஸ்லெட்ஜிங், நக்கல் நையாண்டிகள், வம்புகளுக்கு பஞ்சமிருக்காது. ஸ்மித், வார்னர் உள்ளிட்ட சில ஆஸி., வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு அடங்க, மார்னஸ் லபுஷேன் கில் மற்றும் ரோஹித் சர்மாவிடம் வம்பிழுக்க முயன்றார் லபுஷேன். 2ம் நாள் ஆட்டத்தில் கில்லும் ரோஹித்தும் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த போது, ஷார்ட் லெக் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த லபுஷேன், கில்லிடம் உனக்கு பிடித்த வீரர் யார் என்று கேட்டார். அதற்கு, அப்புறம் சொல்கிறேன் என்றார் கில். இன்றைய ஆட்டம் முடிந்ததும் என்ற அர்த்தத்தில் அப்புறம் என்றார் கில். ஆனால் லபுஷேன், அப்புறம் என்றால், இந்த ஓவருக்கு அப்புறமா என்று கேட்டார். மேலும், சச்சினா கோலியா என கேட்க, கில் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.

அதன்பின்னர், ரோஹித் சர்மாவிடம் சென்று, குவாரண்டினில் என்ன செய்தீர்கள் என்று வேடிக்கையாக கேட்டார் லபுஷேன். அந்த வீடியோவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா டுவிட்டரில் பகிர, அந்த வீடியோ செம வைரலாகிவருகிறது.