வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் எடுக்கப்படாத இளம் வீரர் ஷுப்மன் கில், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். 

இந்தியா ஏ அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் ஆடிவருகிறது. அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வென்று ஏற்கனவே தொடரை வென்றுவிட்டது. 

இந்நிலையில், மூன்றாவது போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டிக்கான அணியின் ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணியை முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கே இந்திய பவுலர்கள் சுருட்டினர். கிருஷ்ணப்பா கௌதம் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ஏ அணியின் முதல் மூன்று விக்கெட்டுகள் 14 ரன்களுக்கே விழுந்துவிட்டது. பிரியங் பன்சால் 3 ரன்களிலும் அபிமன்யூ 6 ரன்களிலும் மயன்க் அகர்வால் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்திருந்தது.  14 ரன்களுக்கே இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டதால் அடுத்த பேட்ஸ்மேனையும் இழந்துவிடக்கூடாது என்பதற்காக நைட் வாட்ச்மேனாக நதீம் இறக்கப்பட்டார். இரண்டாம் நாள் ஆட்டநேரமுடிவில் கில்லுடன் நதீம் களத்தில் நின்றார். 

மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நதீம் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கில்லுடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான கில், இந்த இன்னிங்ஸில் அதிரடியாக ஆடி சீராக ரன்களை குவித்தார். அரைசதம், சதம், 150 என தொடர்ந்து சிறப்பாக ஆடிய கில், இரட்டை சதமும் விளாசினார். 

கில்லுக்கு ஆதரவளித்து மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த ஹனுமா விஹாரியும் சதம் விளாசினார். ஷுப்மன் கில் 250 பந்துகளில் 204 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹனுமா விஹாரியும் 118 ரன்கள் அடித்து ஆட்டமிழக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் 365 ரன்கள் அடித்து இந்தியா ஏ அணி டிக்ளேர் செய்தது. 

373 ரன்கள் என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி களமிறங்கியது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் அடித்துள்ளது. 

உலக கோப்பைக்கு முன் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் கில் எடுக்கப்பட்டிருந்தார். அதில் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. எனினும் அதன்பின்னர் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிய கில், இந்தியா ஏ அணியிலும் சிறப்பாகவே ஆடினார். அவரை ஒருநாள் அணியில் எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்தன. ஆனாலும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் அணியில் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ராகுல் இல்லாததால்தான் நியூசிலாந்துக்கு எதிராக கில் எடுக்கப்பட்டதாகவும், தற்போது அவர் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பதாகவும் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்திருந்தார். 

இந்நிலையில், தன்னை புறக்கணிக்கமுடியாதபடி செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்திலும் உத்வேகத்திலும், தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் கில், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராக அபாரமான இரட்டை சதத்தை விளாசியுள்ளார்.