2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ஷுப்மன் கில் மற்றும் விஹாரியை தவிர மற்ற அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேறி சொதப்பினர். 

தொடக்க வீரர்களாக மயன்க் அகர்வாலும் அபிமன்யூ ஈஸ்வரனும் இறங்கினர். மயன்க் அகர்வால் 9 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். அபிமன்யூ ஈஸ்வரன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ப்ரியங்க் பன்சால் 18 ரன்களில் அவுட்டானார். 

அதன்பின்னர் ஷுப்மன் கில்லும் ஹனுமா விஹாரியும் இணைந்து சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவருமே சிறப்பாக ஆடினர். அரைசதம் அடித்த ஷுப்மன் கில் சதத்தை நோக்கி ஆடினார். கில்லை தொடர்ந்து அரைசதம் அடித்த ஹனுமா விஹாரி, அரைசதம் அடித்த மாத்திரத்திலேயே 51 ரன்களில் அவுட்டானார். கில்லும் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு   119 ரன்களை சேர்த்தனர். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின்னர், மளமளவென இந்தியா ஏ அணியின் பேட்டிங் ஆர்டர் சரிந்தது. இதையடுத்து 216 ரன்களுக்கே இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. ஷுப்மன் கில்லும் ஹனுமா விஹாரியும் ஏமாற்றியிருந்தால், இந்திய அணி படுமோசமான ஸ்கோரை அடித்திருக்கும். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நியூசிலாந்து ஏ அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் அடித்துள்ளது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரூதர்ஃபோர்டு 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வில் யங்குடன் ஜோடி சேர்ந்த ராச்சின் ரவீந்திரா விரைவாக ஸ்கோர் செய்து 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து யங்குடன் அஜாஸ் படேல் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். யங்கும் படேலும் முதல் நாள் ஆட்ட முடிவில் களத்தில் உள்ளனர். இந்திய பவுலர்கள் இஷான் போரெலும் முகமது சிராஜும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.