விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை அணி வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடி 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மும்பை மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப் போட்டி தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற விதர்பா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 75 ரன்கள் எடுத்தார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய விதர்பா அணியானது 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 27 ரன்கள் எடுத்தார். பின்னர் மும்பை அணி 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், தொடக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் பூபென் லால்வானி இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதன் பிறகு ஜோடி சேர்ந்த முஷீர் கான் மற்றும் அஜின்க்யா ரஹானே இருவரும் இணைந்து 3 ஆவது விக்கெட்டிற்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். இதில் ரஹானே 73 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். முதல் இன்னிங்ஸில் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 2ஆவது இன்னிங்ஸில் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தார். இதில், ஷ்ரேயாஸ் ஐயர் 111 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஏற்கனவே ரன்கள் அடிப்பதில் சொதப்பி வருகிறார் என்று அவர் மீது விமர்சனம் எழுந்தது. மேலும், அடுத்து வரும் டி20 தொடரில் அவருக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படக் கூடும் என்றெல்லாம் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் முதல் இன்னிங்ஸில் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 2ஆவது இன்னிங்ஸில் 95 ரன்கள் குவித்து 5 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.

மற்றொரு வீரர் முஷீர் கான் 326 பந்துகளில் 10 பவுண்டரி உள்பட 136 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக மும்பை அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 418 ரன்கள் எடுத்து 537 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து விதர்பா 538 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வருகிறது. இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், இலக்கை எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Scroll to load tweet…