இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் அவசரப்படாமல் நிதானமாக தொடங்கினர். ஆனால் ராகுல், கோட்ரெல் மெதுவாக வீசிய பந்தில் சிக்கி ஆட்டமிழந்தார். கோட்ரெல் வீசிய ஸ்லோ டெலிவரியை சரியாக கணிக்காத்தால் மிஸ் டைமிங்காக அடிக்கப்பட்ட அந்த பந்தை ஹெட்மயர் கேட்ச் பிடித்தார். அதே ஓவரிலேயே கோலியையும் 4 ரன்களில் வீழ்த்தினார் கோட்ரெல். 

அதன்பின்னர் ரோஹித்தும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து சிறப்பாக ஆடினர். பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக ஆடிய இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 55 ரன்களை சேர்த்தனர். 55 பந்துகளை எதிர்கொண்டு களத்தில் நன்றாக செட்டில் ஆகியிருந்த ரோஹித் சர்மா, 56வது பந்தில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதையடுத்து ஷ்ரேயாஸ் ஐயருடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் நிறைய பந்துகளை எதிர்கொண்டு களத்தில் செட்டில் ஆகியிருந்த நிலையில், ரிஷப் பண்ட் களத்திற்கு வந்தார். ரிஷப் பண்ட் ஏற்கனவே சரியாக ஆடாமல், கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருந்த நிலையில், கண்டிப்பாக சிறப்பாக ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் களத்திற்கு வந்தார். 

அண்மைக்காலமாக படுமோசமாக திணறிவந்த ரிஷப் பண்ட், இந்த முறை களத்திற்கு வந்தது முதலே எந்த வித பதற்றமும் இல்லாமல் நேர்த்தியாக ஷாட்டுகளை ஆடினார். பந்துகளை வீணடிக்காமல், சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். இந்திய அணிக்கு நீண்டகால சிக்கலாக இருந்துவந்த மிடில் ஆர்டர் பிரச்னைக்கு தீர்வளிக்கும் விதமாகவும் நம்பிக்கையளிக்கும் விதமாகவும் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் ஆடினர். சிறப்பாக ஆடிய இருவருமே அரைசதம் அடித்தனர். நான்காவது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்து, தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகின்றனர். 

ரிஷப் பண்ட் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை அடித்து, தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் அடித்து ஆடிவருகிறார்.