Asianet News TamilAsianet News Tamil

கோலி 70 சதங்களை கேண்டி கிரஷ் விளையாடியா அடிச்சாப்ள..? அவரு கிரேட் பிளேயர்.. அக்தர் அதிரடி

ஃபார்மில் இல்லாத விராட் கோலிக்கு ஆதரவாக ஷோயப் அக்தர் குரல் கொடுத்துள்ளார்.
 

shoaib akhtar backs virat kohli despite his poor form
Author
Chennai, First Published Jul 17, 2022, 6:52 PM IST

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, 71வது சதத்தை அடிக்க முடியாமல் இரண்டரை ஆண்டாக போராடிவருகிறார்.

கடைசியாக 2019 நவம்பரில் சதமடித்த விராட் கோலி, அதன்பின்னர் இரண்டரை ஆண்டாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. விராட் கோலி மீது அவர் ஆடும் ஒவ்வொரு தொடரிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் அவரும் ஒவ்வொரு தொடரிலும் தொடர்ந்து சொதப்பியே வருகிறார்.

டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், இளம் வீரர்கள் பலர் இந்திய அணியில் இடம்பிடிக்க போட்டி போட்டுவரும் நிலையில், விராட் கோலியின் மோசமான ஃபார்ம் கவலையளிக்கிறது. மேலும், ஃபார்மில் இல்லாத கோலிக்காக, ஃபார்மில் இருக்கும் திறமையான வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்க தவறக்கூடாது என்ற குரல்கள் எழுந்துள்ளன.

கோலி என்ற அடையாளத்துக்காக மட்டுமே அவருக்கு அணியில் இடமளிப்பதைவிட, தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் கோலிக்கு பதிலாக, தகுதியான மற்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கபில் தேவ், வெங்கடேஷ் பிரசாத் ஆகிய முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து கூறினர்.

ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா கோலிக்கு ஆதரவாக இருந்துவருகிறார். கோலிக்கு ஆதரவாகவும் விமர்சித்தும் கருத்துகள் கூறப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், கோலிக்கு ஆதரவாக ஷோயப் அக்தர் குரல் கொடுத்துள்ளார். கோலி குறித்து பேசிய ஷோயப் அக்தர், கபில் தேவ் எனக்கு சீனியர். அவரது கருத்துகளின் மீது எனக்கு மதிப்பு இருக்கிறது. கபில் தேவ் மிகச்சிறந்த கிரிக்கெட்டர். அவரது கருத்தை கூறுவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் ஒரு பாகிஸ்தானியராக நான் ஏன் கோலிக்கு ஆதரவளிக்கிறேன்? கோலி 70 சதங்கள் அடித்திருக்கிறார். 70 சதங்களை அவர் ஒன்றும் கேண்டி கிரஷ் விளையாடி அடிக்கவில்லை.  

கடந்த 10 ஆண்டுகளில் கோலி தான் சிறந்த கிரிக்கெட் வீரர். மிக விரைவில் கோலி கம்பேக் கொடுப்பார் என்று அக்தர் கோலிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios