இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் சீனியர் தொடக்க வீரரான ஷிகர் தவான், 2010ம் ஆண்டு ஒருநாள் அணியிலும் 2011ம் ஆண்டு டி20 அணியிலும் 2013ம் ஆண்டு டெஸ்ட் அணியிலும் அறிமுகமானார் தவான். 2018 இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் தவானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் தவான் ஆடிவருகிறார். 

தோனியின் கேப்டன்சியில் அறிமுகமான தவான், அவரது தலைமையின் கீழ் தான் அதிகமாக ஆடியுள்ளார். தவான் இந்திய அணிக்காக 130 ஒருநாள் போட்டிகளிலும் 34 டெஸ்ட் போட்டிகளிலும் 61 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார் தவான்.

தனது கெரியரில் தோனியின் கேப்டன்சியில் அதிகமாக ஆடியவர் தவான். ரசிகர்களின் கேள்விகளுக்கு டுவிட்டரில் பதிலளித்துவரும் தவானிடம், தோனியுடனான மறக்கமுடியாத, பிடித்தமான நினைவுகளை பகிருமாறு ஒரு ரசிகர் கேட்டிருந்தார். 

அதற்கு பதிலளித்த தவான், தோனியுடன் நிறைய நல்ல நினைவுகள் உள்ளன. குறிப்பாக, 2013 சாம்பியன்ஸ் டிராபி தான் தோனியுடனான மிகச்சிறந்த தருணம். அதுதான் எனது கம்பேக் தொடர். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பயிற்சி போட்டிகளில் நான் சரியாகவே ஆடவில்லை; சொதப்பினேன். ஆனாலும் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு ஆதரவளித்து என்னை தொடக்க வீரராக இறக்கினார் தோனி. ஒரு போட்டியில் கூட தோற்காமல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். களத்திலும் களத்திற்கு வெளியேயும் தோனியுடன் இருந்த அந்த தருணங்கள் மகிழ்ச்சியானவை என்று தவான் கூறியுள்ளார்.

2010ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமான தவான், அதன்பின்னர் 2013 சாம்பியன்ஸ் டிராபியில் தான் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அபாரமாக ஆடி 5 போட்டிகளில் 363 ரன்களை குவித்து அந்த தொடரில் அதிக ரன்களை குவித்து அசத்தினார். அதன்பின்னர் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியில் நிரந்தர தொடக்க வீரரானார். அந்த சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் கூட தோற்காமல், கோப்பையை வென்றது இந்திய அணி. அதற்கு தவானும் முக்கியமான காரணம். அந்த கோப்பையை வென்ற பின்னர் தான், 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற கேப்டன் என்ற சாதனைக்கு தோனி சொந்தக்காரர் ஆனார்.