உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் நடந்துவருவதால் உலகின் பல்வேறு நாட்டு வீரர்களும் ஐபிஎல்லில் ஆடிவருகின்றனர். 

உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்தியா அல்லது இங்கிலாந்து ஆகிய அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என பல முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர். அதிலும் உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடப்பதால் அந்த அணிக்கு கூடுதல் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. இந்திய அணியும் வலுவாக உள்ளது. நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகளும் வலுவாக திகழ்கின்றன.

ஸ்மித்தும் வார்னரும் இல்லாமல் கடந்த ஓராண்டாக திணறிவந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி உத்வேகம் அடைந்தது. அதன்பின்னர் பாகிஸ்தானை மரண அடி அடித்து வென்றது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான வெற்றி அந்த அணிக்கு கூடுதல் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. 

அந்த அணியில் தொடக்க வீரர் வார்னர் தடையில் இருந்ததால் தொடக்க வீரராக களமிறங்கிய உஸ்மான் கவாஜா அபாரமாக ஆடினார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அபாரமாக ஆடினார். அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இதற்கிடையே உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், ஸ்மித் மற்றும் வார்னரின் தடை முடிந்ததால் அவர்களும் உலக கோப்பை அணியில் இணைய உள்ளனர். 

இந்நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட தனது பார்வையிலான ஆஸ்திரேலிய அணியை முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே அறிவித்தார். அந்த 15 வீரர்களில் உஸ்மானின் பெயரே இல்லை. 

ஃபின்ச் தலைமையிலான அந்த அணியில் வார்னர், ஷார்ட், ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ், ஸ்டார்க், ரிச்சர்ட்ஸன், ஸாம்பா ஆகியோர் ஆடும் லெவனில் உள்ளனர். ஷான் மார்ஷ், நாதன் லயன், ஆஷ்டன் டர்னர், குல்ட்டர்நைல் ஆகியோரை 15 பேர் கொண்ட அணியில் கூடுதல் 4 வீரர்களாக எடுத்துள்ளார். இந்த அணியில் உஸ்மானின் பெயரே இல்லை. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.