2001ல் இந்தியாவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட்டில் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்தது கேப்டன் ஸ்டீவ் வாக்கின் அடம் தான் காரணம் என ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.

ஸ்டீவ் வாக் தலைமையில் தொடர் வெற்றிகளை குவித்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி, 2001ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மும்பையில் நடந்த முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.

அதற்கு முன்பும் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டிலும் வெற்றி பெற்று வெற்றி பயணத்தை தொடர்ந்தது. அந்த அணி, நாங்கதான்.. எங்களை வீழ்த்த யாரும் இல்லை என்ற ஆணவத்துடன் ஆடிய காலம் அது. 

இந்நிலையில், இரண்டாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களை குவித்தது. ஆனால் இந்திய அணி  முதல் இன்னிங்ஸில் வெறும் 171 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணி தாஸ், சடகோபன் ரமேஷ், சச்சின் டெண்டுல்கர், கங்குலி ஆகிய 4 விக்கெட்டுகளையும் 232 ரன்களுக்குள்ளாக இழந்துவிட்டது. அதன்பின்னர் லட்சுமணனுடன் ஜோடி சேர்ந்தார் ராகுல் டிராவிட்.

டிராவிட்டும் லட்சுமணனும் இணைந்து மிகச்சிறப்பாக ஆடினர். நான்காம் நாள் ஆட்டம் முழுவதும் ஆடிய டிராவிட்டும் லட்சுமணனும் இணைந்து 90 ஓவரில் விக்கெட்டே விட்டுக்கொடுக்காமல் 335 ரன்களை குவித்தனர். அபாரமாக ஆடி இரட்டை சதமடித்த லட்சுமணன் 281 ரன்களையும் ராகுல் டிராவிட் 180 ரன்களையும் குவித்தனர். இவர்களின் அபாரமான பேட்டிங்கால் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 657 ரன்களை குவித்து இந்திய அணி டிக்ளேர் செய்தது. ஃபாலோ ஆன் பெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 384 ரன்களை நிர்ணயித்தது இந்திய அணி. 

கடினமான இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி ஹர்பஜன் சிங்கின் சுழலை சமாளிக்க முடியாமல் வெறும் 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் விக்கெட்டுகள் உட்பட 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை ஆல் அவுட் செய்து வெற்றி பெற உதவினார். இதையடுத்து இந்திய அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஃபாலோ ஆன் பெற்ற போட்டியில், அதுவும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதன்பின்னர் மீண்டெழுந்து வரலாற்று வெற்றியை பெற்றது இந்திய அணி.

அந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு அப்போதைய அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் வாக்கின் தவறான அணுகுமுறை தான் காரணம் என்று ஸ்டீவ் வாக்கின் சண்டைக்கோழியான ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்யும்போது, இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2001 கொல்கத்தா டெஸ்ட் குறித்து பேசிய ஷேன் வார்ன், கொல்கத்தாவில் 45 டிகிரியில் வெயில் அடித்து கொளுத்தியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்கு பந்துவீசி பவுலர்கள் அனைவரும் களைப்பாக இருந்தோம். வெயிலால் ஆடுகளம் இன்னும் மோசமாகிக்கொண்டிருந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கப்போகும் நேரத்தில் பவுலர்களான எங்களிடம் வந்தார் கேப்டன் ஸ்டீவ் வாக். 

நான், மெக்ராத், கில்லெஸ்பி, கார்ஸ்போவிக்ஸ் ஆகியோர் தான் பவுலர்கள். நாங்கள் அனைவருமே செம களைப்பாக இருந்தோம். அப்போது எங்களிடம் வந்த ஸ்டீவ் வாக், இந்திய அணிக்கு ஃபாலோ ஆன் கொடுத்து, 2வது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடவைக்கலாம் என்றார் ஸ்டீவ் வாக். பவுலர்களிடம் இதுகுறித்து கேட்டார். மெக்ராத், கில்லெஸ்பி ஆகியோர் களைப்பாக இருப்பதாக கூறினார்கள்.

இந்தியாவில் கண்டிஷன் கடினமாக இருந்தது. ஆனால் வெற்றி பெற்றே தீர வேண்டும் அடம்பிடித்தார். அதற்கு முன் தொடர்ச்சியாக நாங்கள் 16 டெஸ்ட் போட்டிகளில் வென்றிருந்தோம். எனவே தொடர்ச்சியாக 17 டெஸ்ட் வெற்றிகள் என்ற சாதனைக்காக, இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ச்சியாக பந்துவீச வைத்தார் ஸ்டீவ் வாக். ஒருவேளை நாங்கள்(ஆஸ்திரேலியா) 2வது இன்னிங்ஸை ஆடி 200 ரன்களை அடித்திருந்தால், 450 ரன்கள் என்ற இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்திருக்கலாம். அப்படி செய்திருந்தால், இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடியிருக்கும். போட்டியின் முடிவே கூட மாறியிருக்கக்கூடும் என்றார் வார்ன்.