இந்திய அணியின் சீனியர் மற்றும் அனுபவ வீரரான தோனி, கிரிக்கெட்டின் நுணுக்கங்களை அறிந்த புத்திசாலித்தனமான வீரர். அவர் நீண்ட அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பராக இருப்பதால், இக்கட்டான நேரத்திலும் பவுலர்கள் நிராயுதபாணியாக நிற்கும்போதும் ஆலோசனைகளை வழங்குவார். 

தோனியின் ஆலோசனை நல்ல பலனை அளிப்பதுடன் ஆட்டத்தில் திருப்புமுனையையும் ஏற்படுத்திவிடும். அதனால் தோனியின் ஆலோசனைப்படி செயல்பட்ட வீரர்கள் போட்டிக்கு பிறகு தோனிதான் அப்படி செய்ய சொன்னார் என்று சொல்வார்கள். இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கின்றன. 

உலக கோப்பையில் தோனி ஆடுவதன் அவசியமே அவரது பேட்டிங்கைவிட, அவரது அனுபவமும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய ஆலோசனைகளை வழங்குவதும்தான். ஆனால் உலக கோப்பை தொடர் தொடங்கியதிலிருந்து, “தோனி சொல்லித்தான் செஞ்சேன்” என்று யாருமே சொல்லவில்லை. 

இந்நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி, கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தினார். தனது ஹாட்ரிக்கின் கடைசி விக்கெட்டாக முஜீபுர் ரஹ்மானை வீழ்த்தினார் ஷமி. ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு எப்போதாவது கிடைக்கும். அதுவும் அந்த நேரத்தில் ஒரு பவுலர் களத்தில் இருப்பது கூடுதல் பலம். அந்த வகையில் முஜீபுர் ரஹ்மானுக்கு யார்க்கர் போட்டு கிளீன் போல்டாக்கி ஹாட்ரிக் வீழ்த்தினார் ஷமி. போட்டிக்கு பின்னர் பேசிய ஷமி, முஜீபுருக்கு யார்க்கர் போடுவதுதான் தனது திட்டம் என்றும், தோனியும் யார்க்கர் தான் போட சொன்னார் என்று தெரிவித்தார்.