வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஷாய் ஹோப்பின் சதத்தால் 50 ஓவரில் 289 ரன்களை குவித்தது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடினார். மற்றொரு தொடக்க வீரர் சுனில் ஆம்பிரிஷ் வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த டேரன் பிராவோ, ஹோப்புடன் இணைந்து நன்றாக ஆடினார். இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 77 ரன்களை சேர்த்தனர். 

டேரன் பிராவோ 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் இறங்கிய ரோஸ்டான் சேஸும் சிறப்பாகவே ஆடினார். அவரும் தன் பங்கிற்கு 41 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த நிகோலஸ் பூரான், கேப்டன் பொல்லார்டு ஆகியோர் சரியாக ஆடவில்லை. பூரான் 11 ரன்னிலும் பொல்லார்டு 9 ரன்னிலும் வெளியேறினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி சதமடித்த ஷாய் ஹோப், 115 ரன்கள் அடித்து 46வது ஓவரில் ஆட்டமிழந்தார். களத்தில் நிலைத்து சதமடித்து, நன்றாக செட்டில் ஆகியிருந்த ஹோப், டெத் ஓவரில் ஸ்கோரை உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் 46வது ஓவரிலேயே அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். 

ஹோல்டரும் 12 ரன்னில் அவுட்டானார். ஆனால் கீமோ பாலும் ஹைடன் வால்ஷும் இணைந்து டெத் ஓவரில் சில பெரிய ஷாட்டுகளை ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கீமோ பால் மற்றும் ஹைடன் வால்ஷ் ஆகியோரின் கடைசி நேர அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 289 ரன்களை எட்டியது. ஏனெனில் 46வது ஓவரில் ஹோப் அவுட்டாகும்போது ஸ்கோர் 230 ரன்கள் தான். அதன்பின்னர் கடைசி 4 ஓவரில் சுமார் 60 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. அது கீமோ பால் மற்றும் வால்ஷால் தான். 

எனவே 290 ரன்கள் என்ற சவாலான இலக்கை இலங்கை அணி விரட்டுகிறது.