சர்வதேச கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங் மற்றும் தோனி ஆகிய இருவருமே சிறந்த கேப்டன்கள். பாண்டிங் ஆஸ்திரேலிய அணிக்கும், தோனி இந்திய அணிக்கும் கேப்டனாகவும் ஒரு பிளேயராகவும் பல அபார வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளனர். 

ரிக்கி பாண்டிங்கின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, அந்த காலக்கட்டத்தில் வீழ்த்தவே முடியாத வெற்றிகரமான அணியாக கெத்தாக வலம்வந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 2003 மற்றும் 2007 ஆகிய இரண்டு முறை உலக கோப்பையை வென்று கொடுத்தவர் பாண்டிங். அவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, அனைத்து அணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை குவித்து நம்பர் 1 அணியாக திகழ்ந்தது. 2000-2010 வரை அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக ஆஸ்திரேலிய அணி திகழ்ந்தது. அதற்கு முக்கிய காரணம் கேப்டன் ரிக்கி பாண்டிங்.

அதேபோல இந்திய அணியின் கேப்டன் தோனியும் இந்திய அணியை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெற்றிநடை போடவைத்தவர். கங்குலி உருவாக்கியிருந்த இந்திய அணியை மேலும் வளர்த்தெடுத்து, வெற்றிகளை குவித்து கொடுத்தார். ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை(2011), டி20 உலக கோப்பை(2007) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி(2013) என மூன்றுவிதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனிதான். 

பாண்டிங் மற்றும் தோனி ஆகிய இருவருமே சிறந்த பேட்ஸ்மேன்கள் மட்டுமல்லாது தலைசிறந்த கேப்டன்களும் கூட. தோனி மொத்தம் 332 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி 178 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். 120 போட்டிகளில் தோல்வி. 6 போட்டிகள் டை; 15 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இது தோனியின் கேப்டன்சி ரெக்கார்டு. 

ரிக்கி பாண்டிங் தனது கெரியரில், 324 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி, அதில் 220 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். வெறும் 77 தோல்விகள் மட்டுமே. வெற்றி விகிதங்கள், கேப்டன்சி அணுகுமுறை, நம்பர் ஆகியவற்றில் வேறுபாடுகளும் ஏற்ற இறக்கங்களும் இருக்கலாம். ஆனால் இருவருமே கேப்டன்களாக தங்களது அணிக்கு சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர். 

இந்நிலையில், ரசிகர் ஒருவர் டுவிட்டரில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடியிடம், தோனி - பாண்டிங் ஆகிய இருவரில் யார் சிறந்த கேப்டன் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அஃப்ரிடி, நான் பாண்டிங்கை விட தோனி தான் சிறந்த கேப்டன் என்பேன். ஏனெனில், முழுக்க முழுக்க இளம் வீரர்களை கொண்ட அணியை கட்டமைத்து சாதித்து காட்டினார் தோனி  என்று அஃப்ரிடி தெரிவித்தார்.

 

தோனி தலைமையில் 2011 உலக கோப்பையை வென்றபோது, அந்த அணியில் ஆடிய மற்றும் தோனியின் கேப்டன்சி கெரியரில் முக்கியமான வெற்றிகளை பெற காரணமாக இருந்த சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், ஆஷிஸ் நெஹ்ரா, கவுதம் கம்பீர் ஆகியோர் கங்குலியின் கண்டுபிடிப்புகள் என்றாலும் கூட, ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அஷ்வின், ஜடேஜா, பும்ரா, புவனேஷ்வர் குமார் உட்பட பல சிறந்த வீரர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களை வளர்த்துவிட்டுள்ளார் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.