இந்தியா மீதான வஞ்சனையை தொடர்ந்து உமிழ்ந்துகொண்டிருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடிக்கு, இந்திய ரசிகர்களின் அபிப்ராயத்தை பெறும் கொடுப்பனை கிடையாது. தனது ஆணவமான, அத்துமீறும் பேச்சுகளால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய மக்களின் வெறுப்பை சம்பாதித்துவருபவர் அஃப்ரிடி. 

அவருக்கு அவரது பாணியிலேயே பதிலடி கொடுத்து வாயை அடைக்கும் சரியான நபர் இந்தியாவில் கவுதம் கம்பீர் மட்டுமே. கம்பீரின் தக்க பதிலடிகளால் பலமுறை மூக்குடைபட்ட போதிலும், வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், எதையாவது சர்ச்சையாக பேசி வாங்கிக்கட்டிக்கொண்டே இருக்கிறார் அஃப்ரிடி. 

அந்தவகையில், உலக கோப்பைகளில் இந்திய அணிக்கு எதிராக தனது மோசமான ரெக்கார்டுகளுக்கு, தான் சிறப்பாக ஆடாதது காரணம் என்று ஏற்றுக்கொள்ளாமல் திமிராக பேசியுள்ளார் அஃப்ரிடி.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே அனல் பறக்கும். அதிலும் உலக கோப்பை தொடர் என்றால் சொல்லவே தேவையில்லை. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உலக கோப்பை போட்டிகளில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. ஒருநாள் உலக கோப்பை தொடரில் இதுவரை மொத்தம் 7 முறை இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 7 முறையுமே இந்திய அணிதான் வெற்றி பெற்றது. அதேபோல டி20 போட்டிகளில் மோதிய அனைத்து முறையும் இந்திய அணியே வென்றது. 

இவ்வாறு உலக கோப்பை தொடர்களில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் படுமோசமான ரெக்கார்டை வைத்திருக்கும் நிலையில், அந்த அணியின் முன்னாள் வீரரான அஃப்ரிடியும் அதே லெட்சணம் தான். இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய 7 ஒருநாள் உலக கோப்பை போட்டிகளில் 4ல் அஃப்ரிடி ஆடியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக ஆடிய உலக கோப்பை போட்டிகளில் அஃப்ரிடி அடித்த ரன்கள் - 6, 9, 19 மற்றும் 22. அதேபோல டி20 உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அஃப்ரிடி அடித்த ரன்கள் - 0, 8, 8.

இவ்வாறு இந்திய அணிக்கு எதிராக உலக கோப்பைகளில் படுமோசமாக ஆடியுள்ள அஃப்ரிடியிடம், உலக கோப்பைகளில் இந்தியாவுக்கு எதிரான சொதப்பலுக்கு என்ன காரணம் என்று அஃப்ரிடியிடம் டுவிட்டரில் ரசிகர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு, இந்திய அணியின் அதிர்ஷ்டம் என்று பதிலளித்துள்ளார் அஃப்ரிடி. 

அதாவது, அவர் சரியாக ஆடாதது, இந்திய அணியின் அதிர்ஷ்டமாம். அவர் நன்றாக ஆடியிருந்தால் அவரது அணி வெற்றி பெற்றிருக்குமாம். அதை, ஒரு போட்டியிலாவது செய்தல்லவா காட்டியிருக்க வேண்டும்..? ஆடிய காலத்தில் சரியாக ஆடாமல் தானும் அசிங்கப்பட்டு தனது அணியையும் வெற்றி பெற வைக்க முடியாத அஃப்ரிடிக்கு எகத்தாளம் தேவையா? இதை அவரே உணர்ந்துகொண்டு, தன்னிலையும் தகுதியும் அறிந்து பேசவேண்டும், அந்த வாய்ச்சொல் வீரன் அஃப்ரிடி.