சேவாக் இந்திய அணியில் அறிமுகமான ஆரம்பத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகத்தான் இறங்கினார். ஆனால் மிடில் ஆர்டரில் அவர் சரியாக ஆடாததால் அணியில் அவரது இடத்திற்கு ஆபத்துவந்தது. ஆனால் சேவாக்கின் திறமையை அறிந்த கங்குலி, அவரை அணியில் இருந்து நீக்க விரும்பவில்லை. 

சேவாக்கை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற போர்டு உறுப்பினர்களின் கருத்தை புறக்கணித்து சேவாக்கின் திறமையை நிரூபிக்க வைத்து அணியில் தொடரைவைக்க விரும்பினார். அதனால் அவரை தொடக்க வீரராக இறக்கிவிட்டார் கங்குலி. கங்குலிதான் சேவாக்கை தொடக்க வீரராக இறக்கினார் என்பது கிரிக்கெட் தெரிந்த அனைவருக்கும் தெரியும். ஆனால் சேவாக்கிற்கு எந்த மாதிரி நம்பிக்கையளித்து, ஊக்கப்படுத்தி தொடக்க வீரராக இறக்கினார் என்பதை சேவாக்கே தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சேவாக் எழுதியுள்ள கட்டுரையில், என்னிடம் பொதுவாக எப்போதுமே கேட்கப்படும் கேள்வி இதுதான்.. நான் எப்படி மிடில் ஆர்டரில் இருந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக மாறினேன் என்பதுதான் அந்த கேள்வி. நான் தொடக்க வீரரானதில் தாதாவிற்கு மிகப்பெரிய பங்கிருக்கிறது. தாதா என்னை தொடக்க வீரராக இறங்க சொன்னார். அதற்கு, நீங்க இருக்கீங்க.. சச்சின் இருக்கிறார்.. நீங்களே தொடக்க வீரர்களாக இறங்க வேண்டியதுதானே என்று நான் கேட்டேன்.

அதற்கு, தொடக்க வீரருக்கான இடம் காலியாக இருக்கிறது. நீ(சேவாக்) தொடக்க வீரராக இறங்கினால் அணியில் உனக்கான இடம் உறுதி. ஆனால் நீ மிடில் ஆர்டரில் தான் இறங்குவேன் என்றால், யாராவது காயமடையும் வரை நீ காத்திருக்க வேண்டும். நீ எதைப்பற்றியும் யோசிக்காமல் கவலைப்படாமல் தொடக்க வீரராக இறங்கு. உனக்கு 3-4 இன்னிங்ஸ்களில் தொடக்க வீரராக இறங்க வாய்ப்பளிக்கிறேன். ஒருவேளை நீ சரியாக ஆடாவிட்டால், உன்னை அணியிலிருந்து நீக்குவதற்கு முன்னால், சில இன்னிங்ஸ்களில் நீ மிடில் ஆர்டரில் ஆட மீண்டும் வாய்ப்பு தருகிறேன் என்று தாதா எனக்கு நம்பிக்கையளித்தார். அதன்பின்னர்தான் நம்பிக்கையுடன் தொடக்க வீரராக இறங்கினேன் என்று சேவாக் தெரிவித்துள்ளார். 

மேலும் இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அதற்கு முழுக்க முழுக்க கங்குலிதான் காரணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.