விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய நால்வரும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக திகழ்கிறார்கள். 

இவர்களில் விராட் கோலி தான் டாப்பில் இருக்கிறார். இவர்கள் நால்வரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று சொல்வது கடினம். நம்பரின் அடிப்படையில் கோலி தான் டாப். ஆனால் பேட்டிங் திறமை மற்றும் டெக்னிக்கை பொறுத்தமட்டில் நால்வருமே தலைசிறந்தவர்கள் தான். 

பேட்டிங் சாதனைகள் பெரும்பாலும் விராட் கோலியிடமே உள்ளன. இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனைகளை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தின் எதிரொலியாக ஓராண்டு தடை பெற்ற ஸ்மித், ஒன்றரை ஆண்டுக்கு பிறகு, மீண்டும் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டி ஆஷஸ் போட்டிதான்.

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதமடித்து ஆஸ்திரேலிய அணியின் அபார வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார் ஸ்மித். இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக ஆடி 92 ரன்களை குவித்தார். முதல் இன்னிங்ஸில் ஆர்ச்சரின் பவுன்சரில் அடிபட்டதால் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்மித் பேட்டிங் ஆடவில்லை. ஆஷஸ் தொடரில் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் திணறிக்கொண்டிருக்க, ஸ்மித் மட்டும் அசத்தி கொண்டிருக்கிறார். 

கோலி - ஸ்மித் ஆகிய இருவருமே சர்வதேச கிரிக்கெட்டின் தலைசிறந்த 2 வீரர்களாக வலம்வந்துகொண்டிருக்கும் நிலையில், இருவரில் யார் சிறந்த வீரர் என்று சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சேவாக், விராட் கோலி ஸ்மித்தை விட மிகவும் திறமையான மற்றும் சிறந்த வீரர். கோலி - ஸ்மித் ஆகிய இருவரில் கோலி பேட்டிங் ஆடுவதை பார்க்கும்போதுதான் கண்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். கோலி தான் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன். விராட் கோலி சதங்களை அடிக்கும் விதத்தை பாருங்கள். அவர்தான் சிறந்த பேட்ஸ்மேன். சச்சின் டெண்டுல்கரின் பெரும்பாலான சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.