சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்ந்துவரும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு பேட்டிங் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார். 

ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டிலுமே சர்வதேச அளவில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக திகழ்கிறார். பேட்டிங் சாதனைகளை பெரும்பாலும் சச்சின் டெண்டுல்கரே வைத்துள்ள நிலையில், சச்சினின் ஒவ்வொரு சாதனையாக முறியடித்துவருகிறார் கோலி. 

விராட் கோலியின் கிரிக்கெட் கெரியர் முடிவதற்குள் சச்சின் டெண்டுல்கரின் பெரும்பாலான சாதனைகளை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் மிக எளிதாக 43 சதங்களை அடித்துவிட்டார் கோலி. 

இந்நிலையில், கோலி - ஸ்மித் ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு, கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று தெரிவித்த சேவாக், கோலியின் கெரியர் முடிவதற்குள் சச்சின் டெண்டுல்கரின் பெரும்பாலான சாதனைகளை முறியடித்துவிடுவார் என தெரிவித்தார். 

ஆனால், சச்சினின் எத்தனை ரெக்கார்டுகளை தகர்த்தெறிந்தாலும், சச்சின் டெண்டுல்கரின் 200 டெஸ்ட் போட்டிகள் என்ற சாதனையை மட்டும் எந்த வீரராலும் முறியடிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். 

இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் 200 சர்வதேச டெஸ்ட் போட்டிகளை ஆடிய ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் தான். அவருக்கு அடுத்தபடியாக தலா 168 போட்டிகளில் ஆடிய பாண்டிங் மற்றும் ஸ்டீவ் ஆகிய இருவரும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.