கபில் தேவ், கங்குலி, தோனி ஆகியோர் கேப்டனாக இந்திய அணியை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வளர்த்தெடுத்துள்ளனர். இவர்கள் மூவரின் கேப்டன்சியும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நிலைத்து நிற்கக்கூடியவை. 

கங்குலி மற்றும் தோனி ஆகிய இருவருமே அவர்கள் கேப்டனாக இருந்த சமயங்களில் பல இளம் வீரர்களை இனம்கண்டு வளர்த்துவிட்டுள்ளனர். சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ், தோனி ஆகிய வீரர்கள் கங்குலியின் கேப்டன்சியில் இந்திய அணியில் இடம்பெற்று வளர்ந்தவர்கள். சூதாட்ட பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருந்த சமயத்தில் இளம் வீரர்களை கொண்ட அணிக்கு கேப்டனாகி, அணியை நெருக்கடியான சூழலிருந்து மீட்டெடுத்து வெற்றி பாதைக்கு அழைத்து சென்றவர் கங்குலி. சேவாக், யுவராஜ், கைஃப், ஹர்பஜன், ஜாகீர் கான் போன்ற இளம் சரியான வாய்ப்பை வழங்கி அவர்களது திறமையை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு கொடுத்ததோடு அணியை வெற்றிகரமான அணியாக உருவாக்கியவர் கங்குலி.

கங்குலியின் கேப்டன்சியில் இந்திய அணி, 2003 உலக கோப்பையில் இறுதி போட்டி வரை சென்று இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. 

கங்குலிக்கு பின்னர் இடையில் டிராவிட் சில ஆண்டுகள் கேப்டனாக இருந்தார். ஆனால் டிராவிட் கேப்டன்சியில் இந்திய அணி பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. 2007 உலக கோப்பையில் லீக் சுற்றிலேயே வெளியேறியது இந்திய அணி. அந்த தோல்விக்கு பொறுப்பேற்று டிராவிட் கேப்டன்சியில் இருந்து விலகியதை அடுத்து இந்திய அணியின் கேப்டன் ஆனார் தோனி. 

தனது கூலான அணுகுமுறையாலும் அதிரடியான பேட்டிங்காலும் ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்தார். தோனியும் கோலி, ரோஹித், அஷ்வின், ஜடேஜா ஆகிய இளம் வீரர்களுக்கு சரியான வாய்ப்பு கொடுத்து அவர்கள் வளர உதவினார். டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று சர்வதேச கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்தார். 

கங்குலியின் கேப்டன்சியில் 2003ல் வெல்ல முடியாமல் போன உலக கோப்பையை 2011ம் ஆண்டு வென்று கொடுத்தார் தோனி. கங்குலி மற்றும் தோனி ஆகிய இருவரின் கேப்டன்சியிலும் ஆடிய சேவாக், கங்குலிதான் சிறந்த கேப்டன் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க இளம் வீரர்களை கொண்ட ஒரு அணியை வளர்த்தெடுக்க மிகச்சிறந்த தலைமைப்பண்பு அவசியம். அந்தவகையில் மிகச்சிறந்த கேப்டன்களை வரிசைப்படுத்திய சேவாக், கங்குலி தான் சிறந்த கேப்டன் என்றும் கங்குலிக்கு அடுத்தபடியாக தோனியையும் அதற்கடுத்து கோலியையும் தேர்வு செய்துள்ளார் சேவாக்.