ரோஹித் சர்மாவின் அதிரடி பேட்டிங் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவரது கெரியரின் தொடக்கத்தில் பெரிதாக சோபிக்காத ரோஹித், தொடக்க வீரராக களமிறங்கிய பின்னர் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், டி20யில் 4 சதங்கள் என பல சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடக்க வீரராக இறங்கிய ரோஹித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முத்திரை பதித்து தனக்கான இடத்தை இறுகப்பிடித்துக்கொண்டார். 

மூன்றுவிதமான போட்டிகளிலும் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி, விராட் கோலியின் சாதனைகளுக்கு அச்சுறுத்தலாக திகழ்கிறார். ரோஹித் சர்மாவிற்கு இந்த ஆண்டு அருமையானதாக அமைந்துள்ளது. உலக கோப்பையில் 5 சதங்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்க கிடைத்த வாய்ப்பை அபாரமாக பயன்படுத்தி நிரந்தர இடத்தை பிடித்தது, டி20யிலும் அபாரமான பேட்டிங் என தெறிக்கவிட்டுவருகிறார். 

வங்கதேசத்துக்கு எதிராக நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் ரோஹித்தின் பேட்டிங் வேற லெவல். 154 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டிய நிலையில், தொடக்கம் முதலே அடித்து ஆடிய ரோஹித் சர்மா, கவர் டிரைவ், புல் ஷாட், ஸ்டிரைட் டிரைவ் என தனது டிரேட்மார்க் ஷாட்டுகளை தெளிவாக ஆடி அசத்தினார். மொசாடெக் ஹுசைன் வீசிய 10வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசினார். 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 85 ரன்களை குவித்தார். 

தனது 100வது போட்டியில், அடித்து நொறுக்கிய ரோஹித், சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ரோஹித்தின் அதிரடியால் இந்திய அணி 16வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில், ரோஹித் சர்மாவை புகழ்ந்து தள்ளியுள்ளார் சேவாக். ரோஹித் குறித்து பேசிய சேவாக், ஒரே ஓவரில் 3-4 சிக்ஸர்களை விளாசுகிறார். 45 பந்துகளில் 80-90 ரன்களை அடிக்கிறார். இதெல்லாம் மிகப்பெரிய கலை. எல்லாருக்கும் இது வராது. விராட் கோலியே கூட இப்படியெல்லாம் அடித்தது கிடையாது. ஆனால் ரோஹித் சர்மா தொடர்ச்சியாக இப்படி அடித்துவருகிறார் என புகழாரம் சூட்டினார்.