இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்களை குவித்தது. 

183 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் அடித்துள்ளது. ரஹானேவும் ஹனுமா விஹாரியும் களத்தில் உள்ளனர். 

இந்த போட்டியில் இந்திய அணியில் மயன்க் அகர்வால் மற்றும் ரஹானேவை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுமே பேட்டிங் ஆட திணறினர். கோலி, புஜாரா ஆகிய நட்சத்திர வீரர்கள் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களில் வெளியேறினர். 

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் பெரியளவில் அனுபவமில்லாத மயன்க் அகர்வால் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெலிங்டனில் காற்று அதிகமாக இருந்ததால், அதை நன்கு பயன்படுத்தி கொண்ட நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர்கள், இந்திய வீரர்களுக்கு கடும் சவாலளித்தனர். அதனால் முதலில் பேட்டிங் ஆடுவது கடும் சவாலாக இருந்தது. 

ஆனாலும் அந்த சவால்களையெல்லாம் திறம்பட எதிர்கொண்டு, முதல் நாள் ஆட்டத்தின் முதல் செசன் முழுவதும் களத்தில் நின்று சாதனை படைத்தார் மயன்க் அகர்வால். அதன்மூலம் நியூசிலாந்தில் முதல் நாள் ஆட்டத்தில் முதல் செசன் முழுவதும் ஆடிய இரண்டாவது இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையை மயன்க் அகர்வால் படைத்தார். 80 பந்துகளுக்கும் மேல் எதிர்கொண்டு முதல் இன்னிங்ஸில் 34 ரன்களை அடித்தார். முதல் இன்னிங்ஸில் ரஹானே அடித்த 46 ரன்களுக்கு அடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடினார் மயன்க் அகர்வால். பிரித்வி ஷா, புஜாரா ஆகியோர் ஆட்டமிழந்த போதிலும், மறுமுனையில் நிலைத்து நின்றதுடன் அடித்தும் ஆடிய மயன்க் அகர்வால் அரைசதம் கடந்தார். மிகவும் தெளிவாக நேர்த்தியான ஷாட்டுகளை ஆடி அரைசதம் அடித்த மயன்க் அகர்வால், 58 ரன்களில் அவசரப்பட்டு ஆட்டமிழந்தார். கோலி, புஜாரா போன்ற ஜாம்பவான் பேட்ஸ்மேன்களே, நியூசிலாந்து கண்டிஷனில், அந்த அணியின் ஃபாஸ்ட் பவுலர்களை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களுக்கு வெளியேறிய நிலையில், 2 இன்னிங்ஸிலும் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மயன்க் அகர்வால்.

இந்நிலையில், மயன்க் அகர்வாலை நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் வெகுவாக புகழ்ந்துள்ளார். மயன்க் குறித்து பேசியுள்ள ஸ்டைரிஸ், சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் பெரியளவில் இல்லாதவர் மயன்க் அகர்வால். ஆனால் அவரது பேட்டிங் அனுபவ பேட்ஸ்மேன்களுக்கே ஒரு பாடமாக அமைந்தது. நியூசிலாந்தில் எப்படி பேட்டிங் ஆட வேண்டும் என்பதை தனது சக வீரர்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார் மயன்க் அகர்வால். 

Also Read - கோலியோட மோசமான கேப்டன்சி தான் இந்த நிலைமைக்கு காரணம்.. முன்னாள் டெஸ்ட் ஜாம்பவான் கடும் தாக்கு

எந்த பந்தை எப்படி ஆட வேண்டும் என்பதை தெளிவாக அறிந்து அதற்கேற்ப ஆடினார். எந்த பந்தை விட வேண்டுமோ அதை விட்டார். எந்த பந்தை அடிக்க வேண்டுமோ அதை அடித்தார். அடித்து ஆடுவதற்கு தகுதியான பந்திற்காக காத்திருந்து அதை அடித்து ஆடினார். ரொம்ப சிம்பிளாக பேட்டிங் ஆடினார். அவரது பேட்டிங் அபாரம் என மயன்க் அகர்வாலை ஸ்டைரிஸ் புகழ்ந்துள்ளார்.