இந்தியா - நியூசிலாந்து இடையே வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

இந்த போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலுமே இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் வெறும் 165 ரன்கள் மட்டுமே அடித்த இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2 இன்னிங்ஸ்களிலும் மயன்க் அகர்வால் மட்டுமே சிறப்பாக ஆடினார். ரஹானே ஓரளவிற்கு ஆடினார். இவர்களை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. 

இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சீனியர் மற்றும் நட்சத்திர வீரர்களான கோலி, புஜாரா கூட சரியாக ஆடவில்லை. இருவருமே இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா 2 இன்னிங்ஸ்களிலும் ஏமாற்றமளித்தார். ரிஷப் பண்ட், ஹனுமா விஹாரி ஆகியோரும் பேட்டிங்கில் சொதப்பினர். 

முதல் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங் தான் காரணம். எனவே இரண்டாவது போட்டியில் கண்டிப்பாக ஷுப்மன் கில்லை சேர்க்க வேண்டும் என்று ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டைரிஸ், ஷுப்மன் கில் இந்திய அணியின் ஸ்பெஷல் திறமைசாலி. அவரை ஆடவைக்காமல் வெளியே உட்காரவைத்தது சரியான செயல் அல்ல. ஷுப்மன் கில், கோலியுடன் இணைந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்திய பேட்டிங் ஆர்டருக்கு வலு சேர்ப்பார் என்பது என் கணிப்பு. எனவே கில்லை அடுத்த போட்டியில் கண்டிப்பாக அணியில் சேர்க்க வேண்டும். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுமே, புதிதாக வரும் வீரர்களை ஆறாம் வரிசையில் இறக்குவது தான் வழக்கம். பிரித்வி ஷா இளம் வீரர் என்பதால், அவரை வேறு கண்டிஷனில் இறக்குவதாக உறுதியளித்து, அடுத்த போட்டியில் அவரை நீக்கிவிட்டு, ஹனுமா விஹாரியை தொடக்க வீரராகவும், விஹாரி இறங்கும் ஆறாம் வரிசையில் ஷுப்மன் கில்லையும் இறக்கலாம். பிரித்வி ஷாவை நீக்கும் ஐடியா இல்லையென்றால், விஹாரியை நீக்கிவிட்டு கில்லை ஆறாம் வரிசையில் இறக்க வேண்டும். இல்லையெனில், கில்லையே தொடக்க வீரராகக்கூட இறக்கலாம். ஏனெனில் கில் ஸ்பெஷலான பேட்ஸ்மேன். அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.