ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து முத்தரப்பு டி20 தொடரில் ஆடிவருகின்றன. 

இந்த தொடரில் அயர்லாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையேயான முதல் போட்டி, மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்தானது. இரண்டாவது போட்டி ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 252 ரன்களை குவித்தது. 

ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜார்ஜ் முன்சியும் கைல் கோயர்ட்ஸுமே 200 ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கே ஸ்காட்லாந்து அணி 200 ரன்களை குவித்தது. ஜார்ஜ் முன்சியும் கைலும் இணைந்து நெதர்லாந்து அணியின் பவுலிங்கை பொளந்துகட்டினர். தொடக்க ஜோடியையே பிரிக்க முடியாமல் நெதர்லாந்து அணி திணறியது. 7 வீரர்கள் பந்துவீச வைக்கப்பட்டனர். அப்படியும் அந்த ஜோடியை அவ்வளவு எளிதாக பிரிக்க முடியவில்லை. 7 பேரின் பவுலிங்கையும் ஜார்ஜ் முன்சியும் கைலும் தெறிக்கவிட்டனர். 

கைல் 50 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னரும் தொடர்ந்து அதிரடியாக ஆடி சிக்ஸர் மழை பொழிந்த ஜார்ஜ் முன்சி, சதமடித்தார். 56 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 14 சிக்ஸர்களுடன் 127 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் ஜார்ஜ் முன்சி. இவரது அதிரடியான பேட்டிங்கால் ஸ்காட்லாந்து அணி 252 ரன்களை குவித்தது. 

253 ரன்கள் என்ற அசாத்திய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியின் கேப்டன் பீட்டர் சீலார் மட்டுமே சிறப்பாக ஆடினார். அவரை தவிர மற்றவர்கள் பெரிதாக சோபிகவில்லை. பீட்டர் சீலர் 49 பந்துகளில் 96 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். ஆனால் அவர் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. பீட்டருக்கு ஒத்துழைப்பு கொடுத்து யாரும் ஆடாததால் அவர் கடைசிவரை களத்தில் இருந்தும்கூட, அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. 

20 ஓவர் முடிவில் நெதர்லாந்து அணி 194 ரன்களை அடித்து 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

ஸ்காட்லாந்து அணி இந்த போட்டியில் அடித்த 252 ரன்கள் தான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில்  6வது அதிகபட்ச ஸ்கோர். டி20 கிரிக்கெட்டில் 260 ரன்கள் அடித்துள்ள இந்திய அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தை ஸ்காட்லாந்து அணி பிடித்துள்ளது.