ஷ்ரேயாஸ் ஐயர் இடத்தில் சாதிக்க துடிக்கும் கேரளத்து இளம் புயல் - யார் தெரியுமா?
காயம் காரணமாக ஒரு நாள் போட்டியில் விலகும் ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதன் காரணமாக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 3ஆவது நாளன்று இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, மிடில் ஆர்டரில் களமிறங்க வேண்டிய ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி வரையில் களமிறங்க வரவேயில்லை. ஒரு வேளை கடைசியில் அவர் களமிறங்கியிருந்தால், விராட் கோலி தனது இரட்டை சதத்தை அடித்திருப்பார்.
முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் அணி நிர்வாகத்திடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து
ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர், 4ஆவது நாள் ஆட்டத்திலும், 5ஆவது நாள் போட்டியிலும் விளையாடமாட்டார் என்று அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது தொடர் முடிந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர், வரும் 17ஆம் தேதி நடக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய அணியில் 4ஆவது வீரராக களமிறங்கும் ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக மாற்று வீரராக யார் களமிறங்குவா? என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது. அவருக்குப் பதிலாக, அந்த இடத்தில் சூர்யகுமார் யாதவ் இறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவரையில் ஒரு நாள் போட்டிகளில் அதிரடியாக விளையாடி தனக்கென்று தனி இடத்தை வகுத்துக் கொண்ட சூர்யகுமார் யாதவ் ஒரு நாள் போட்டியிலும் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இதுவரையில் ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக யாரும் அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை அவருக்குப் பதிலாக ஒரு மாற்றுவீரர் அறிவிக்கப்பட்டால் அது சஞ்சு சாம்சனாகத்தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.