சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 164 ரன்கள் அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 165 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 14வது சீசனில் சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. துபாயில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
ராஜஸ்தான் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் எவின் லூயிஸ் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் 2வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சனும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இணைந்து 56 ரன்கள் சேர்த்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்னில் ஆட்டமிழந்தார்.
லியாம் லிவிங்ஸ்டோன் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிய சஞ்சு சாம்சன், 2வது ஸ்ட்ராடஜிக் டைம் அவுட் பிரேக்கிற்கு பிறகு, அதிரடியாக அடித்து ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். அரைசதத்திற்கு பிறகு வெளுத்துவாங்கிய சஞ்சு சாம்சன், 82 ரன்களில் ஆட்டமிழந்தார்.
லோம்ரார் 29 ரன்கள் அடித்தார். சஞ்சு சாம்சன் அடித்து ஆடியபோது, ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 180 ரன்களாவது வந்திருக்க வேண்டும். ஆனால் கடைசி 2 ஓவர்களை புவனேஷ்வர் குமாரும், சித்தார்த் கவுலும் சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தியதால், 20 ஓவரில் 164 ரன்கள் அடித்த ராஜஸ்தான் அணி, 165 ரன்கள் என்ற சவாலான இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
