Asianet News TamilAsianet News Tamil

TNPL 2022: டிஎன்பிஎல்லின் அதிவேக அரைசதம் அடித்து சஞ்சய் யாதவ் சாதனை! திண்டுக்கல்லை வீழ்த்தி நெல்லை அபார வெற்றி

சஞ்சய் யாதவின் அதிரடி அரைசதத்தால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

sanjay yadav record fifty helps nellai royal kings to beat dindigul dragons in tnpl 2022
Author
Tirunelveli, First Published Jun 30, 2022, 8:53 PM IST

மழையால் போட்டி தாமதம்:

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி மழையால் தாமதமானது. திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸுக்கு இடையேயான போட்டி மழையால் தாமதமானது.

டாஸ் ரிப்போர்ட்:

தாமதமாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. மழையால் ஆட்டம் தாமதமானதால் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

நெல்லை ராயல் கிங்ஸ் அணி:

லக்‌ஷ்மேஷா சூர்யபிரகாஷ், ஸ்ரீநிரஞ்சன், பாபா அபரஜித், பாபா இந்திரஜித் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சஞ்சய் யாதவ், ஜி அஜிதேஷ், ஜிதேந்திர குமார், எம் ஷாஜகான், என்.எஸ்.ஹரிஷ், அதிசயராஜ் டேவிட்சன், ஆர்யா யோஹன் மேனன்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி:

விஷால் வைத்யா, ஹரி நிஷாந்த் (கேப்டன்), மணிபாரதி (விக்கெட் கீப்பர்), ஏஜி பிரதீப், மோகித் ஹரிஹரன், ஆர் விவேக், லக்‌ஷ்மிநாராயணன் விக்னேஷ், கரபரம்பில் மோனிஷ், எஸ் அருண், எம் சிலம்பரசன், ரங்கராஜ் சுதேஷ்.

முதல் இன்னிங்ஸ் ரிப்போர்ட்:

முதலில் பேட்டிங் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள், 12 ஓவர் போட்டி என்பதால் முதல் ஓவரிலிருந்தே அடித்து ஆட ஆரம்பித்தனர். தொடக்க வீரர்கள் விஷால் வைத்யா - ஹரி நிஷாந்த் இணைந்து அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவரில் 82 ரன்களை குவித்தனர். ஹரி நிஷாந்த் 27 பந்தில் 37 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான விஷால் வைத்யா 21 பந்தில்45 ரன்களை விளாசினார். அதன்பின்னர் விவேக், பிரதீப், மோனிஷ் ஆகியோரின் பங்களிப்பால் 12 ஓவரில் 130 ரன்களை குவித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 131 ரன்கள் என்ற கடின இலக்கை நெல்லை ராயல் கிங்ஸுக்கு நிர்ணயித்தது.

நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி:

12 ஓவரில் 131 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் சூர்யபிரகாஷ் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான நிரஞ்சன் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 4.3 ஓவரில் 34 ரன்களுக்கு நெல்லை அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

அதன்பின்னர் சஞ்சய் யாதவும் பாபா அபரஜித்தும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். வெறும் 15 பந்தில் அரைசதம் அடித்து, இந்த சீசனின் அதிவேக அரைசதம் என்ற சாதனையை படைத்த சஞ்சய் யாதவ், டிஎன்பிஎல்லின் அதிவேக அரைசதம் என்ற சாதனையை பகிர்ந்துள்ளார்.

சஞ்சய் யாதவ் 19 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 55 ரன்களையும், பாபா அபரஜித் 30 பந்தில் 59 ரன்களையும் விளாச, 11 ஓவரிலேயே 131 ரன்கள் என்ற இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios