இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 287 ரன்களை குவித்தது. 288 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப் மற்றும் ஹெட்மயர் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சதமடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி பெற செய்தனர். 48வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் டிரெஸ்ஸிங் ரூம் உதவியுடன் பொல்லார்டு அம்பயரிடம் ரிவியூ கேட்டது சர்ச்சையாகியுள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கின்போது, 48வது ஓவரில் ஒரு பந்தை அடித்துவிட்டு ஜடேஜா வேகமாக ரன் ஓடினார். அந்த பந்தை பிடித்த ரோஸ்டான் சேஸ், நேரடியாக ஸ்டம்பில் அடித்தார். மிகவும் க்ளோசான ரன் அவுட் அது. ஆனால் அதற்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. தேர்டு அம்பயரையும் நாடவில்லை. 

கள நடுவர், டிவி அம்பயரை நாடாததை அடுத்து உடனடியாக அதற்கு எதிர்வினை ஆற்றாத கேப்டன் பொல்லார்டு, டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து சிக்னல் வந்த பின்னர் அம்பயரிடம் , தேர்டு அம்பயரை நாடுமாறு பொல்லார்டு வாதிட்டார். வெஸ்ட் இண்டீஸ் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்தவர்கள், ரீப்ளேவை பார்த்துவிட்டு அது அவுட்டுதான் என்று தெரிந்ததும், பொல்லார்டிடம் தெரிவித்தனர். அதன்பிறகுதான் பொல்லார்டு, கள நடுவரிடம், டிவி அம்பயரிடம் கேட்குமாறு வலியுறுத்தினார். 

டிவி ரீப்ளேவில் அவுட் என்று உறுதியானதை அடுத்து ஜடேஜாவிற்கு அவுட் கொடுக்கப்பட்டு, அவர் வெளியேறினார். ரூல்ஸ் படி, களத்தில் இருக்கும் வீரர்கள், ரிவியூ கேட்கும் விவகாரங்களில் களத்திற்கு வெளியே இருந்து எந்த உதவியையும் பெறக்கூடாது. அந்தவகையில், வெஸ்ட் இண்டீஸ் டிரெஸ்ஸிங் ரூம் சிக்னல் கொடுத்ததும் அதன்பின்னர் பொல்லார்டு ரிவியூ கேட்டதும் பெரும் சர்ச்சையானது. 

போட்டிக்கு பின்னர் இந்த சம்பவம் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இந்த விஷயம் ரொம்ப சிம்பிள். ஃபீல்டர் அவுட் கேட்கிறார்; ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. அத்துடன் அது முடிந்துவிட்டது. ஆனால் களத்திற்கு வெளியே இருந்து(டிரெஸ்ஸிங் ரூம்), டிவியில் ரிப்ளே பார்த்துவிட்டு அம்பயரிடம் ரிவியூ கேட்குமாறு வீரர்களுக்கு சிக்னல் கொடுக்கக்கூடாது. கிரிக்கெட்டில் இதுவரை இப்படியான சம்பவம் நடந்து நான் பார்த்ததில்லை. ரூல்ஸ் எல்லாம் என்ன ஆயிற்று என்று எனக்கு தெரியவில்லை. போட்டி நடுவரும் அம்பயர்களும், அந்த விவகாரத்தை திரும்ப பார்க்க வேண்டும். இதுபோன்ற விவகாரங்களுக்கு முடிவுகட்ட வேண்டும். களத்திற்கு வெளியே இருப்பவர்கள் களத்தில் இருப்பவர்களை வழிநடத்தக்கூடாது. இப்போது அதுதான் நடந்தது என்று கோலி மிகவும் காட்டமாக தெரிவித்தார். 

இந்த சம்பவம் குறித்து டுவீட் செய்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், கள நடுவர் நாட் அவுட் என்று சொல்லிவிட்டார். களத்திற்கு வெளியே டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து யாரோ, பொல்லார்டிடம் இது அவுட் என்று கூறியிருக்கிறார்கள். உடனே, கள நடுவரிடம் சென்று, தேர்டு அம்பயரிடம் ரிவியூ கேட்குமாறு பொல்லார்டு வாதிடுகிறார். இது எந்த வகையில் நியாயம்..? ஸ்மித் செய்த விஷயத்திலிருந்து இது எந்தவிதத்தில் மாறுபடுகிறது? என்று சஞ்சய் மஞ்சரேக்கர் டுவீட் செய்துள்ளார். 

2017ல் பெங்களூருவில் நடந்த டெஸ்ட் போட்டியில், ஸ்மித் டிரெஸ்ஸிங் ரூம் உதவியுடன் ரிவியூ கேட்டார். அது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. ஸ்மித்தும் ஆஸ்திரேலிய டிரெஸ்ஸிங் ரூமும் கடுமையான கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியது. டி.ஆர்.எஸ் என்றால் டிரெஸ்ஸிங் ரூம் ரிவியூ சிஸ்டம் என்று பிசிசிஐ-யே டுவீட் செய்து கிண்டலடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்மித் விவகாரம் பூதாகரமான நிலையில், அந்தளவிற்கு இந்த முறை பொல்லார்டு விவகாரம் பெரிதாகவில்லை.